சீனாவிற்கு எதிரான வர்த்தக போரில் தங்களது நாடு நிச்சயம் வெல்லும் :அமெரிக்கா அமைச்சர் மைக் பாம்பியோ உறுதி

தினகரன்  தினகரன்
சீனாவிற்கு எதிரான வர்த்தக போரில் தங்களது நாடு நிச்சயம் வெல்லும் :அமெரிக்கா அமைச்சர் மைக் பாம்பியோ உறுதி

வாஷிங்க்டன் : சீனாவிற்கு எதிரான வர்த்தக போரில் தங்களது நாடு நிச்சயம் வெல்லும் என்று அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். சீன இறக்குமதிகளால் உள்நாட்டு தொழில்கள் நசிவதாக கூறி அந்த பொருட்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து வரியை அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் 5000 கோடி டாலர் அளவிற்கு சீன பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது. அடுத்து வரும் வாரத்தில் மேலும் 2000 கோடி டாலர் அளவிற்கு வரி விதிக்கப்பட உள்ளது. இந்த தொகையின் அளவு இந்த ஆண்டின் இறுதியில் மேலும் அதிகரிக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு பதிலடி தரும் வகையில் அந்நாட்டு பொருட்களுக்கு சீன அரசு வரியை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் உருவானது.இதையடுத்து, சீனாவும், அமெரிக்காவும் மாறி மாறி வரி விதித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வர்த்தகப் போரில் தங்களது நாடு நிச்சயம் வெற்றிபெறப் போவதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.சீனாவின் செயலால் தங்களுக்கு நன்மை ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ள அவர், சீனா வெளிப்படைத் தன்மையுடனும், சட்டத்தை மதித்தும் நடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அறிவுச் சொத்தை யாரும் திருட முடியாது என்று தெரிவித்துள்ள மைக் பாம்பியோ, சீனாவுக்கு பதிலடி கொடுப்பதை, அதிபர் டிரம்ப் மிகவும் விரும்புவதாகவும் கூறினார்.

மூலக்கதை