இமாச்சல பிரதேசத்தில் தொடரும் கனமழை எதிரொலி : 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

தினகரன்  தினகரன்
இமாச்சல பிரதேசத்தில் தொடரும் கனமழை எதிரொலி : 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் தொடரும் கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடரும் மழையால் அம்மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாய் காட்சி அளிக்கிறது. குறிப்பாக சின்னாவூர், குலூ, கங்காரா மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழையால் ரவி, பியாஸ் உள்ளிட்ட நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  மணாலியில் வெள்ளப் பெருக்கு காரணமாக மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஒரு கனரக லாரி மற்றும் சொகுசு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி உள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு அதிகரித்த வண்ணம் இருப்பதால் மக்கள் அருகில் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. வெள்ளப் பாதிப்பை தொடர்ந்து 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் மின்சார வசதி இல்லாமல் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் போக்குவரத்தும் முடங்கியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகளில் இருந்து அதிகளவில் நீர் திறக்கப்பட்டுள்ளது.  

மூலக்கதை