ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

PARIS TAMIL  PARIS TAMIL
ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தை (தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம்) பிரதமர் நாடு முழுவதும் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட இத்திட்டத்தினை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு காப்பீட்டு அடையாள அட்டை மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான முன் அனுமதியினையும் வழங்கினார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம்) திட்டத்துடன் ஒருங்கிணைத்து மிகச்சிறப்பாக செயல்படுத்த தமிழக அரசு முடிவு எடுத்தது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 11-ந் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. இதை செயல்படுத்துவதன் மூலம் தமிழகத்தில் உள்ள 77 லட்சம் ஏழை குடும்பங்களில் உள்ள சுமார் 2.85 கோடி பேர் இனி ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரையிலான கட்டணமில்லா இலவச மருத்துவ சேவையை பெறமுடியும்.

மேலும் தமிழ்நாடு முதல்- அமைச்சரின் உத்தரவின்படி முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 1.57 கோடி குடும்பத்தின் அனைத்து பயனாளிகளும் இனி ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீட்டினை பெற முடியும்.

உயர் சிறப்பு சிகிச்சைகளான காது நுண் எலும்பு கருவி பொருத்தும் சிகிச்சை, கல்லீரல், சிறுநீரகம், எலும்பு மஜ்ஜை மற்றும் ஸ்டெம் செல், இருதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, செவிப்புல மூளை தண்டு உள்வைப்பு அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கு ரூ.25 லட்சம் வரையிலும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட தொகுப்பு நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருவதை இத்திட்டத்தில் இணைக்கப்படும் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தொடர்ந்து வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் பி.உமாமகேஸ்வரி, மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டின் தேசிய ஆரோக்கிய நிறுவன நிபுணர் டாக்டர் சச்சின் போக்கரே, ஆலோசகர் ராம்கோபால் சுக்லா, மருத்துவத்துறை இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த தகவல்கள் தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன

மூலக்கதை