ரஃபேல் விமான ஊழலை கண்டுபிடிக்க விசாரணையைத் தவிர வேறு வழியில்லை : ப.சிதம்பரம் ட்விட்

தினகரன்  தினகரன்
ரஃபேல் விமான ஊழலை கண்டுபிடிக்க விசாரணையைத் தவிர வேறு வழியில்லை : ப.சிதம்பரம் ட்விட்

புதுடெல்லி : பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2016ல் மோடி அரசு ஒப்பந்தம் செய்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இது குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் உதிரி பாகங்கள் தயாரிப்பிற்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை மத்திய அரசு சிபாரிசு செய்தது என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கூறினார். ஆனால் விமானத்தை தயாரிக்கும் டசால்ட் நிறுவனம், தங்களுக்கு தேவையான நிறுவனத்தை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம் என விளக்கம் அளித்திருந்தது. இதுகுறித்து பேசிய அருண் ஜெட்லி ஹாலண்டேயின் கருத்துக்கும், ராகுல்காந்தி குற்றச்சாட்டிற்கும் ஒரு சில விதத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுகிறது என்று கூறினார். மேலும் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும், நமது பாதுகாப்பு படைக்கு வலிமை சேர்க்க தேவையான நவீன போர் விமானங்கள் நமக்கு வந்து சேரவேண்டிய நேரத்தில் வந்து விடும் என்றும் கூறினார். இந்நிலையில் ரஃபேல் போர் விமான விவகாரத்தில் அருண் ஜெட்லி கருத்து குறித்து விமர்சித்த ப.சிதம்பரம், உண்மைக்கு இரண்டு முகங்கள் இருக்க முடியாது என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியது முற்றிலும் சரி என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்த முகம் உண்மை முகம் என்று எப்படி கண்டுபிடிப்பது? இரண்டு வழிகள் தாம் இருக்கின்றன. ஒன்று, விசாரணைக்கு உத்தரவிடுவது. இரண்டு, நாணயத்தைச் சுண்டி பூவா, தலையா என்று பார்ப்பது என்றும், நிதி அமைச்சர் இரண்டாவது வழியை விரும்புகிறாரோ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ரபேல் விமான உடன்பாட்டில் தவறு நடந்திருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிப்பதற்கு விசாரணையைத் தவிர வேறு வழியில்லை என்றும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ரபேல் ஒப்பந்தத்திற்காக ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனமானது ஒப்பந்தம் கையெழுத்தான 10 நாட்களுக்கு முன்னர்தான் திடீரென உருவாக்கப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை