இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 11 ஆண்டுகள் அதிகரிப்பு : ஐ.நா. மனித வள மேம்பாட்டுத்துறை அறிக்கையில் தகவல்

தினகரன்  தினகரன்
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 11 ஆண்டுகள் அதிகரிப்பு : ஐ.நா. மனித வள மேம்பாட்டுத்துறை அறிக்கையில் தகவல்

டெல்லி : கடந்த 28 ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 11 ஆண்டுகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஐ.நா. மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த 1990ம் ஆண்டில் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 57.9 ஆண்டுகளாக இருந்ததாகவும் தற்போது அது 68.8 ஆண்டுகளாக அதிகரித்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போல தனிநபரின் ஆண்டு சராசரி வருமானமும் சுமார் 1.21 லட்சத்தில் இருந்து ரூ.4.50 லட்சமாக உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் இது 267% அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது. அருகில் உள்ள பிற ஆசிய நாடுகளை ஒப்பிடும் போது கல்வி, சுகாதாரம், தனிநபர் வருமானம் ஆகியவற்றில் இந்தியாவின் வளர்ச்சி அதிகம் எனவும் உலக அளவில் சராசரியான மனித வள மேம்பாட்டு வளர்ச்சி 22% அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் வளர்ச்சி 50% ஆக உயர்ந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை விட இந்தியாவில் பெண்களுக்கு அதிக உரிமை உள்ளதாக கூறப்பட்டுள்ள அந்த அறிக்கையில், நாடாளுமன்றத்தில் 11.6% மட்டுமே பெண் எம்.பி.க்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது போல இந்திய பெண்களின் சராசரி ஆயுள் காலம் 70.4 ஆண்டுகளாக இருப்பதாகவும் இது ஆண்களின் சராசரி ஆயுளை விட 3 ஆண்டு கூடுதல் எனவும் கூறப்பட்டுள்ளது.மேலும் இந்தியாவில் ஆண்களை விட இந்திய பெண்கள் தான் அதிக ஆண்டுகள் கல்வி கற்பதாகவும் ஐ.நா.அறிக்கை தெரிவித்துள்ளது.

மூலக்கதை