மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்: ஆயிரக்கணக்கான சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு

தினகரன்  தினகரன்
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்: ஆயிரக்கணக்கான சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 13-ம் தேதி முதல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 10 நாட்கள் வழிபாட்டிற்கு பிறகு ஆயிரக்கணக்கான சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நேற்று காலை முதல் கடலில் கரைக்கப்பட்டன. இதற்காக மாநகராட்சி சார்பில் கடற்கரைகள், ஏரிகள், செயற்கை குளங்கள் என 168 இடங்களில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலத்துடன் கரைக்க எடுத்து செல்லப்படுவதால், மும்பை நகரமே திருவிழா கோலம் பூண்டது. இந்த ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். சுமார் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் தவிர கடற்படையினர், வெடிகுண்டு நிபுணர் பிரிவினர், கலவர தடுப்பு பிரிவனர், ஊர்காவல் படையினர், அதிவிரைவு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சிலை கரைப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை நீடித்தது. விநாயகர் சிலைகளை பக்தர்கள் நீண்ட தூரம் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடற்கரை பகுதிக்குக் கொண்டு வந்தனர். அங்கு கிரேன்கள் மூலம் சிலைகள் கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. மும்பையில் வைக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற லால்பஹுச்சா ராஜ கணபதி சிலை, நேற்று காலையே கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. மேலும் மும்பையின் கிர்காம் சவுபட்டி, ஜுஹு, பொவாய் ஏரி, தாதர் சவுபட்டி ஆகிய பகுதிகளில் சிலைகள் கரைக்கப்பட்டன. அதேபோல், புனே, நாசிக், சோலாப்பூர், கோலாப்பூர், அவுரங்காபாத், நான்டெட், ஜல்காவோன், அமராவதி, நாக்பூர் பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை