மராத்தான் போட்டி நடத்துவது. விளையாட்டா போச்சு!  பண வசூலுக்கு இப்படியும் வழி!

தினமலர்  தினமலர்
 மராத்தான் போட்டி நடத்துவது. விளையாட்டா போச்சு!  பண வசூலுக்கு இப்படியும் வழி!

கோவை;வணிக நோக்கத்துக்காக திடீர், திடீரென மராத்தான் போட்டி நடத்தி, பணம் சம்பாதிப்பதை சிலர் குறிக்கோளாக கொண்டுள்ளனர். சமூக நலனுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறி வசூலிக்கும் பணம்,போட்டி நடத்துவோரின் பாக்கெட்டுக்கு செல்வதாக,புகார் எழுந்துள்ளது.ஆரம்ப காலங்களில், சமூக நோக்கங்களை மையமாக வைத்து, நிதி திரட்டும் நோக்கத்துடன், நகரின் முக்கிய பகுதிகளில், மராத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. மிக அரிதாகவே, இது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
சமீப காலங்களாக, சிலர் விளம்பரத்துக்காகவும், வியாபார நோக்கத்துக்காகவும் மராத்தான், 'வாக்கத்தலான்' என்ற பெயர்களில், விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகின்றனர்.இப்போட்டிகளில் பங்கேற்க, நபர் ஒருவருக்கு, 500 முதல் 1,200 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இது தவிர, போட்டிகள் நடத்தவும், விளம்பரம் பலகைகள் வைக்கவும், பல நிறுவனங்களிடம் 'ஸ்பான்சர்' பெறப்படுகிறது.
ஒருங்கிணைப்பாளர்களிடம் விசாரித்தால், பங்கேற்பு சான்றிதழ், பதக்கம், உணவு, டீ- சர்ட்டுக்கான செலவு இது என்கிறார்கள். இது போக, மீதமுள்ள பணம், போட்டி நடத்துவோரின் பாக்கெட்டுக்கு செல்வதாகவும், சமூக நலனுக்கு செலவிடப்படுவதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இப்படி பணம் செலவு செய்து போட்டியில் பங்கேற்றாலும், குழந்தைகள், போட்டியாளர்களின் பாதுகாப்புக்கு ஒரு உத்தரவாதமும் கிடையாது.
போட்டியின் போது வீரர்களுக்கு திடீரென காயம் ஏற்பட்டால், அவசர உதவிக்கு, ஆம்புலன்ஸ் வசதிகளும் இருப்பதில்லை. போக்குவரத்து போலீசாருக்கும், வீண் கால விரயம் ஏற்படுகிறது.விளையாட்டு ஆர்வலர்கள் சிலர் கூறுகையில்,'கோவையில் கடந்த சில மாதங்களில் மட்டும், 20க்கும் மேற்பட்ட மராத்தான் போட்டிகளை நடத்தியுள்ளனர். இதில், வசூலாகும் பணம் சமூக நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுகிறதா என்பது சந்தேகமே' என்றனர்.

மூலக்கதை