விஜய் ஹசாரே டிராபி ரயில்வேசுக்கு எதிராக மும்பை அபார வெற்றி

தினகரன்  தினகரன்
விஜய் ஹசாரே டிராபி ரயில்வேசுக்கு எதிராக மும்பை அபார வெற்றி

பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபி ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் மும்பை அணி 173 ரன் வித்தியாசத்தில் ரயில்வேஸ் அணியை அபாரமாக வென்றது.எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த மும்பை அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 400 ரன் குவித்தது. பிரித்வி ஷா 129 ரன் (81 பந்து, 14 பவுண்டரி, 6 சிக்சர்), ஷ்ரேயாஸ்  அய்யர் 144 ரன் (118 பந்து, 8 பவுண்டரி, 10 சிக்சர்), சூரியகுமார் யாதவ் 67 ரன் (55 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். சித்தேஷ் 30, ஆதித்யா தாரே 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.அடுத்து களமிறங்கிய ரயில்வேஸ் அணி 42.4 ஓவரில் 227 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. கேப்டன் சவுரவ் வகாஸ்கர் 48, பிரசாந்த் அவஸ்தி 41, தேவ்தர் 36, அங்கித் யாதவ் 35*, ஆகாஷ் யாதவ் 24 ரன் எடுக்க, மற்ற  வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். மும்பை அணி 173 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 4 புள்ளிகளை தட்டிச் சென்றது.

மூலக்கதை