தவிப்பு:உதவி தொகையின்றி கர்ப்பிணிகள்: ஏழு மாதங்களாக காத்திருப்பு

தினமலர்  தினமலர்

மதுரை:மதுரை மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் உதவி தொகை, ஊட்டச்சத்துப்பொருட்கள் கிடைக்காமல் வறுமைகோட்டிற்கு கீழுள்ள கர்ப்பிணிகள் தவிக்கின்றனர்.இங்கு ஆண்டுக்கு 54 ஆயிரம் கர்ப்பிணிகள், உதவி தொகை பெற பெயர்களை பதிவு செய்து 'பிக்மி' எண் பெறுகின்றனர்.வறுமை கோட்டிற்கு கீழுள்ள கர்ப்பிணிகளுக்கு பேரீச்சம்பழம், நெய், சத்துமாவுகள் மற்றும் ஏப்ரலுக்கு முன் பதிந்தால் 12 ஆயிரம், அதற்கு பின் பதிவு செய்தால் 18 ஆயிரம் ரூபாய் உதவி தொகை என மாவட்டத்திற்கு 30 கோடி ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ரத்தசோகை உள்ள கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் பிரசவத்தின் போது சிக்கல் ஏற்படுவதை தவிர்க்க இந்த தொகை வழங்கப்படுகிறது.தவிப்புகர்ப்பமுற்றவுடன் பெயரை பதிவு செய்து பிரசவம் முடிந்த பிறகும் கூட உதவி தொகை கிடைக்காமல் கர்ப்பிணிகள் தவிக்கின்றனர். அவனியாபுரம் நகர்ப்புற சுகாதார மையத்தில் மட்டுமே 105 பேர் பதிவு செய்து ஏழு மாதங்களாக காத்திருக்கின்றனர். ஊட்டச்சத்து, செலவுக்கான நிதியின்றி பிரசவங்களின் போது சில பிரச்னைகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜீன்குமார் கூறியதாவது: கர்ப்பிணிகள் பெயரை பதிவு செய்ததும் உதவி தொகை கிடைப்பதற்காக உடனுக்குடன் நிதி ஒதுக்கப்படுகிறது. உதவி தொகை கிடைக்காதது குறித்து விசாரிக்கப்படும் என்றார்.

மூலக்கதை