தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா

தினமலர்  தினமலர்
தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா

துபாய்: ஆசிய கோப்பை 'சூப்பர்-4' சுற்றுப்போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்த தவான், ரோகித் சர்மா சதம் கடந்தனர். இவர்களின் அபார ஆட்டம் கைகொடுக்க இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த 'சூப்பர்-4' சுற்றுப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

மாலிக் அரை சதம் :

பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக், பகர் ஜமான் ஜோடி துவக்கம் தந்தது. இமாம் 10 ரன்களில் அவுட்டானார். குல்தீப் 'சுழலில்' பகர் (31) சிக்கினார். ஜடேஜா பந்தில் பாபர் ஆசம் (9) ரன் அவுட்டானார். பின், இணைந்த கேப்டன் சர்பராஸ், சோயப் மாலிக் ஜோடி சிறப்பாக விளையாடியது. பொறுப்புடன் செயல்பட்ட மாலிக் அரை சதம் எட்டினார். இந்த நேரத்தில் சர்பராசை (44) வெளியேற்றினார் குல்தீப். புவனேஷ்வரின் 42வது ஓவரில் ஆசிப் அலி இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார்.

பும்ரா 'வேகத்தில்' தொல்லை தந்த மாலிக் (78) ஆட்டமிழந்தார். சகால் பந்தில் ஆசிப் அலி (30) போல்டானார். ஷாதப் கானை (10) பும்ரா திருப்பி அனுப்பினார். பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்தது. நவாஸ் (15), ஹசன் அலி (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, சகால், குல்தீப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தவான் விளாசல் :

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான், கேப்டன் ரோகித் சர்மா ஜோடி 'சூப்பர்' துவக்கம் தந்தது. முகமது ஆமிர், ஷஹீன் அப்ரிதி பந்துவீச்சில் தலா ஒரு பவுண்டரி அடித்தார் தவான். தன் பங்கிற்கு அப்ரிதி பந்தை ரோகித் சிக்சருக்கு பறக்கவிட்டார். அபாரமாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தனர். இவர்களை பிரிக்க முடியாமல் பவுலர்கள் திணறினர். எதிரணி பந்துவீச்சை வெளுத்துவாங்கிய தவான் ஒரு நாள் அரங்கில் 15வது சதம் எட்டினார். இவர் (114) ரன் அவுட்டானார். ரோகித் 19வது சதம் அடித்து அசத்தினார்.

இந்திய அணி 39.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 238 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் (111), ராயுடு (12) அவுட்டாகாமல் இருந்தனர். ஏற்கனவே லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி தற்போது மீண்டும் வென்றுள்ளது.

50 :

இப்போட்டியில் ஆசிப் அலியை வெளியேற்றிய சகால் ஒரு நாள் அரங்கில் 50வது விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம், இந்த இலக்கை அதிவேகமாக (30 போட்டி) எட்டிய 5வது இந்திய பவுலரானார். முதலிடத்தில் அகார்கர் (23 போட்டி) உள்ளார்.

7,000 :

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, தனது 94வது ரன்னை அடைந்த போது ஒருநாள் போட்டியில் 7,000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் (181 இன்னிங்ஸ் ) இம்மைல்கல்லை எட்டிய வீரர்களுக்கான பட்டியலில் 5வது இடம் பிடித்தார் ரோகித்.

மூலக்கதை