வாழை நார் நூலிழையில் ஆடை புதிய முயற்சி! களமிறங்கியது நிப்ட்- டீ கல்லூரி

தினமலர்  தினமலர்
வாழை நார் நூலிழையில் ஆடை புதிய முயற்சி! களமிறங்கியது நிப்ட் டீ கல்லூரி

திருப்பூர்:வாழை நார் மற்றும் பருத்தி நுாலிழை கலந்து, புதுவகை ஆடைதயாரிக்கும் முயற்சியில், நிப்ட்-டீ கல்லுாரி, களமிறங்கியுள்ளது.திருப்பூரின் பின்னலாடை வர்த்தகத்தை அதிகரிக்க, முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி, புதுவகை ஆடைகளை தயாரித்து அறிமுகப்படுத்தி வருகிறது. பட்டு நுாலிழை, கம்பளி இழையில் பின்னலாடை உட்பட பல்வேறு புதுவகை ஆடைகள் தயாரிக்கப்பட்டு, சந்தைப்படுத்தப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, வாழை நாரில் பின்னலாடை உருவாக்கும் முயற்சியில், நிப்ட்- டீ கல்லுாரி இறங்கியுள்ளது, வாழை நாருடன் பருத்தி இழை கலந்து, கோடை காலத்துக்கு ஏற்ப ஆடை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.வாழை மரத்தின் தண்டுப்பகுதியில் உள்ள நார், பஞ்சாக மாற்றப்படும்; இதனுடன், சம அளவில் பருத்தி பஞ்சு கலந்து, கலப்பு நுால் உருவாக்கப்படும். இந்நுாலில், துணி தயாரிக்கப்பட்டு, ஆடை வடிவமைப்புக்கு பயன்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு, 'நபார்டு' வங்கி, 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்குகிறது.
நிப்ட்-டீ கல்லுாரி ஆய்வு மைய தலைவர் செந்தில் கூறியதாவது;வீணடிக்கப்படும் வாழை நாரில், நெசவு துணி உற்பத்தி வெற்றிகரமாக நடந்து வருகிறது. முதன் முறையாக, வாழை நாருடன் பருத்தி பஞ்சு கலந்து, ஆடை தயாரிக்கும் முயற்சியில், நிப்ட்-டீ கல்லுாரி களமிறங்கியுள்ளது.
தற்போது, வாழை நாரை பஞ்சாக மாற்றும் பணி நடந்து வருகின்றன; அதன்பின், பஞ்சிலிருந்து கலப்பு நுாலிழை தயாரிக்கப்படும். நுால் தயாரிப்புக்கு, கோவை 'சிட்ரா' உதவியை நாட உள்ளோம். வாழை நாருக்கு, இயற்கையாகவே ஈரத்தை உறிஞ்சும் தன்மையுண்டு. எனவே, அதன் மூலம் தயாரிக்கப்படும் ஆடை, கோடை காலத்துக்கு உகந்ததாக இருக்கும்.உள்நாட்டு ஆடை வர்த்தக சந்தையில், 'லினென்' ஆடைகளுக்கு விலை அதிகம்; அதற்கு நிகரான தரத்தில், வாழை நார் மற்றும் பருத்தி பஞ்சு கலந்து மிக மெல்லிய, மென்மையான நுாலிழை மூலம், புதிய ஆடை தயாரிப்பதே இலக்கு. ஆடை உற்பத்தி முழுமை பெறும் போது, உள்நாட்டில், புதிய 'பிராண்ட்' அறிமுகப்படுத்தவும் ஆலோசனை செய்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை