மக்களவை தேர்தலில் பாஜ வென்றால் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிய கணக்கெடுப்பு நடத்தப்படும்: அமித்ஷா அறிவிப்பு

தினகரன்  தினகரன்
மக்களவை தேர்தலில் பாஜ வென்றால் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிய கணக்கெடுப்பு நடத்தப்படும்: அமித்ஷா அறிவிப்பு

புதுடெல்லி: ‘‘அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால் நாடு முழுவதும் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண கணக்கெடுப்பு நடத்தப்படும்’’ என்று பாஜ தலைவர்  அமித்ஷா தெரிவித்தார்.டெல்லியில் பாஜ கட்சியின் பூர்வாஞ்சல் மகாகும்ப் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ராம்லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜ தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களால் தலைநகரில் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், நாடு முழுவதும் சட்ட  விரோதமாக குடியேறி உள்ளவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு அசாமில் நடைபெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் இந்த கணக்கெடுப்பை  நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. சட்ட விரோதமாக குடியேறியவர்கள் கரையான்புற்று போல் செயல்பட்டு நாட்டை அழித்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் எந்த தேசபக்தனும் கவலைப்பட மாட்டார்கள்.   ஆனால், இது தொடர்பாக நாங்கள் நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம் ராகுல் காந்தியும், கெஜ்ரிவாலும் புகார் கூறுகின்றனர். ஓட்டு வங்கி அரசியலுக்காகவே அவர்கள் சட்ட விரோத குடியேறிகள் பற்றி கவலை கொள்கின்றனர்.  எனவே, சட்ட விரோதமாக குடியேறியவர்கள் பற்றி தங்கள் நிலையை ராகுலும், கெஜ்ரிவாலும் தெளிவுபடுத்த வேண்டும். டெல்லியின் வளர்ச்சிக்கு கெஜ்ரிவால் அரசு கடந்த மூன்றரை ஆண்டுகளாக தடையாக உள்ளது. பொய்  சொல்வதே கெஜ்ரிவாலின் கொள்கையாக உள்ளது. அதை அழுத்தமாக திரும்ப திரும்ப செய்து வருகிறார். எதிர்க்கட்சிகள் உருவாக்கும் மகா கூட்டணிக்கு கொள்கையோ, தலைவரோ கிடையாது. ராகுல் அந்த கூட்டணிக்கு  தலைமை ஏற்க நினைக்கிறார். அதை சரத்பவார், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் எதிர்க்கின்றனர். மேற்கு மாநிலங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது போல் கிழக்கு மாநிலங்களை வளர்ச்சி அடைய செய்வதே மோடி அரசின் நோக்கம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

மூலக்கதை