பாய்மரப் போட்டியில் பங்கேற்றபோது ஆஸ்திரேலிய கடலில் மாயமான இந்திய கடற்படை அதிகாரி கண்டுபிடிப்பு: மீட்டு வர போர் கப்பல்கள் விரைந்தன

தினகரன்  தினகரன்
பாய்மரப் போட்டியில் பங்கேற்றபோது ஆஸ்திரேலிய கடலில் மாயமான இந்திய கடற்படை அதிகாரி கண்டுபிடிப்பு: மீட்டு வர போர் கப்பல்கள் விரைந்தன

கொச்சி: பாய்மரப் படகுப்போட்டியில் பங்கேற்றபோது மாயமான இந்திய கடற்படை அதிகாரி கமாண்டர் அபிலாஷ் தோமி, ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.உலகம் முழுவதும் பாய்மரப் படகில் சுற்றிவரும் வகையிலான கோல்டன் குளோப் படகுப் போட்டி பிரான்சில் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது. இதில், இந்திய கடற்படை அதிகாரி அபிலாஷ் தோமி (39) பங்கேற்றார். இவர்  கடந்த 21ம் தேதி, இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட திடீர் புயலால் 14 மீட்டர் உயரத்துக்கு எழும்பிய அலையில் அபிலாஷின் படகு சேதமடைந்தது. அதைத்தொடர்ந்து அபிலாஷ் மாயமானார். அவரை கண்டுபிடிக்கும் பணியில் ஆஸ்திரேலிய கடற்படை ஈடுபட்டது. அதேசமயம், இந்திய கடற்படையின் பி8ஐ விமானமும் மீட்பு பணியில் இறங்கியது. இந்நிலையில், நேற்று  அதிகாலை மொரீசியசில் இருந்து புறப்பட்ட பி8ஐ விமானம், அபிலாஷின் படகு இருக்குமிடத்தை கண்டுபிடித்தது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திலிருந்து 1900 நாட்டிகல் மைல் தொலைவில் அபிலாஷ் பலத்த காயத்துடன்  படகில் இருந்தார். பாதுகாப்பு கருவியின் மூலம் அவர் விமானிக்கு பதிலளித்தார்.அப்பகுதியில் மோசமான வானிலை நிலவுவதாலும், அபிலாஷுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாலும் கப்பல் மூலமாக மட்டுமே அவரை மீட்க முடியும். எனவே, ஐஎன்ஸ் சத்புரா மற்றும் ஐஎன்எஸ் ஜோதி ஆகிய 2 இந்திய  போர் கப்பல்கள் முழு வேகத்தில், அபிலாஷ் இருக்குமிடத்தை நோக்கி விரைந்துள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.

மூலக்கதை