கிராம சபை கூட்டத்திற்கு சென்று திரும்பியபோதுஎம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை: ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்

தினகரன்  தினகரன்
கிராம சபை கூட்டத்திற்கு சென்று திரும்பியபோதுஎம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை: ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்

திருமலை: ஆந்திராவில் கிராம சபை கூட்டத்திற்கு சென்று திரும்பியபோது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் தெலுங்கு தேசம் எம்எல்ஏ சர்வேஸ்வர்  ராவ், முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அரக்கு தொகுதியில் மலைவாழ் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்கு நிலக்கரி எடுப்பதற்கு மாவோயிஸ்டுகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று அரக்கு தொகுதி, தும்ரிகூடா  மண்டலம், துட்டங்கி  கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் தெலுங்கு தேசம் கட்சி  எம்எல்ஏ சர்வேஸ்வர் ராவ், முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டனர். பின்னர், காரில் அரக்கிற்கு திரும்பி வந்து  கொண்டிருந்தனர்.  அப்போது, மறைந்திருந்த  40 பெண் மாவோயிஸ்டுகள், 20 ஆண் மாவோயிஸ்டுகள் என 60 பேர் சேர்ந்து காரை சுற்றிவளைத்து அதில் இருந்த அனைவரையும் கீழே  இறக்கினர். பின்னர், அதிலிருந்த எம்எல்ஏ சர்வேஸ்வர் ராவ், சிவேரி சோமாவை  துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர்.இந்த தாக்குதலை காரில் இருந்த ஆதரவாளர்கள் தடுக்க முயன்றனர். அப்போது அவர்களையும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டு  உள்ளது. இது குறித்து தகவலறிந்த விசாகப்பட்டினம் எஸ்பி ரகுல்தேவ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சடலங்களை விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூட்டில் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ கொல்லப்பட்ட சம்பவம் ஆ்ந்திராவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி  உள்ளது.கடந்த 2014ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர்காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சர்வேஸ்வரா ராவ், 63 ஆயிரத்து 700 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் தெலுங்கு தேசம்  கட்சியில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் இணைந்தார். இதற்கிடையே, மாவோயிஸ்டுகள் தாக்குதலில் எம்எல்ஏ.வும், முன்னாள் எம்எல்ஏவும் கொல்லப்பட்டதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கண்டனம்  தெரிவித்துள்ளார்.  முன்னாள் எம்எல்ஏ டிரைவர் சிட்டிபாபு  நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென  மாவோயிஸ்டுகள் எங்களை சுற்றி  வளைத்தனர். காரை நிறுத்தியவுடன்  எம்எல்ஏவையும், முன்னாள் எம்எல்ஏ சோமாவையும் காரில் இருந்து கீழே இறங்க  வைத்து அங்கிருந்த பாதுகாவலர்களின்  துப்பாக்கிகளை பறித்துக் கொண்டனர். பின்னர்  எம்எல்ஏவையும், முன்னாள் எம்எல்ஏவையும் தனித்தனியாக அழைத்து சென்ற  மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அப்ேபாது,  எங்களை யாராவது  பின்தொடர்ந்தாலோ அல்லது வேறு ஏதாவது செய்ய முயன்றாலோ நீங்களும்  துப்பாக்கிக்கு பலியாக வேண்டி இருக்கும் என்று எங்களுக்கு  எச்சரிக்கை  விடுத்து சென்றனர் என்றார்.பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்: எம்எல்ஏக்கள் உடலை விசாகப்பட்டினம் கொண்டு செல்ல அதிகாரிகள் முற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கிராம மக்கள் இதே  இடத்திலேயே உடலை வைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மலைவாழ் மக்கள் என்றால் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் அலட்சியமா? அதற்கு உதாரணமாக தான் தற்போது மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 2 எம்எல்ஏக்கள்  இறந்துள்ளனர் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர்.

மூலக்கதை