திறந்தவெளி கழிப்பிடமில்லா மாநிலமாக மாறகுஜராத்துக்கு இன்னும் லட்சம் கழிவறை தேவை

தினகரன்  தினகரன்
திறந்தவெளி கழிப்பிடமில்லா மாநிலமாக மாறகுஜராத்துக்கு இன்னும் லட்சம் கழிவறை தேவை

அகமதாபாத்:  திறந்தவெளி கழிப்பிடமில்லா மாநிலமாக அறிவிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தில் இன்னும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில்  கழிவறை தேவை உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலம் திறந்தவெளி கழிப்பிடமில்லா மாநிலமாக மாற்றுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. கடந்த 2014ம் ஆண்டு மத்திய  அரசு, தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கியது. அதில் இருந்து  பொதுமக்களுக்கு 32 லட்சம் கழிவறைகள் கட்டிக் கொடுப்பதற்காக ரூ.2,893 கோடியை குஜராத் அரசு  செலவிட்டுள்ளது. இதில், 1,778.96 கோடி மத்திய அரசின் ஒதுக்கீடாகும். கடந்த பிப்ரவரி மாதம் மக்களவையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்கள் திறந்தவெளி கழிப்பிடமில்லா மாநிலங்களாக  அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,  தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குஜராத் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கேட்டு சமூக ஆர்வலர்  ஹிதேஷ் சாவ்தா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுத்தாக்கல் செய்தார். இதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில், இந்த ஆண்டு மே-ஜூனில், மாநிலத்தின் கிராமப்புற பகுதிகளில் உள்ள 1.40 லட்சம் குடும்பங்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  கழிவறை வசதியை பெறவில்லை. இதை தவிர வதராவில் 17,874 குடும்பங்கள், சோட்ட உதேப்பூரில் 26,687, கட்ச்சில் 14,878, சபர்கந்தா 34.607, பதான் 27108, மஹிசாகர்  19,526 மற்றும் அம்ரேலி மாவட்டத்தில் 21,320 வீடுகளில் கழிவறைகள் கட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிராமப்புற மேம்பாடு துணை ஆணையர் மற்றும் செயலாளர் மோனா கந்தஹர் கூறுகையில், “குடும்பத்தின் மூத்த மகன், மகள், சகோதரர்கள்  திருமணமாகி தனி குடும்பமாக மாறி விடுகின்றனர். இதுபோன்று தனி குடும்பமாக மாறும்போது புதிய கழிவறை தேவையாகிறது. ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 5  சதவீதம் கிராமப்புற வீடுகளில் ஒரு லட்சம் புதிய கழிவறைகள் தேவைப்படுகிறது. கூடுதல் கழிவறை தேவையை பூர்த்தி செய்வதற்காக நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

மூலக்கதை