ரயில் பயணத்தின்போது ஈவ்டீசிங் செய்தால் 3 ஆண்டு சிறை: ரயில்வே பாதுகாப்பு படை பரிந்துரை

தினகரன்  தினகரன்
ரயில் பயணத்தின்போது ஈவ்டீசிங் செய்தால் 3 ஆண்டு சிறை: ரயில்வே பாதுகாப்பு படை பரிந்துரை

புதுடெல்லி: ரயிலில் பயணம் செய்யும் பெண்களை ஈவ்டீசிங் செய்யும் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யும்படி அரசுக்கு ரயில்வே பாதுகாப்பு படை பரிந்துரை செய்துள்ளது.ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் சமீபத்தில் பதிலளித்த ரயில்வே அமைச்சகம், கடந்த 2014-16ம் ஆண்டுகளில் ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 35 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்தது. 2014ம் ஆண்டு 448 என்ற அளவில் இருந்த இந்த குற்றச் சம்பவம், 2015ல் 553 ஆகவும், 2016ம் ஆண்டு 606 ஆகவும் உயர்ந்துள்ளதாக தெரிவித்திருந்தது. இதுபோன்று ரயில் பயணத்தின்போது பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரிப்பதை தடுக்க ரயில்வே சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) பரிந்துரை செய்துள்ளது. இதன்படி, ரயிலில் பயணம் செய்யும்போது பெண்களை ஈவ்டீசிங் செய்தாலோ, துன்புறுத்தினாலோ 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.  இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயிலில் பயணம் செய்யும் பெண்களை தாக்கினாலோ அல்லது பெண்களுக்கான பெட்டியில் ஆண்கள் அமர்ந்திருப்பதை கண்டுபிடித்தால் நாங்கள் அரசு ரயில்வே போலீசார் (ஜிஆர்பி) அனுமதியின்றி குற்றவாளிகளை கைது செய்ய முடியாது. எனவே, குற்றவாளிகளை நாங்களே கைது செய்ய அனுமதி அளிக்கப்பட்டால் குற்றவாளி மீது நாங்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.மற்றொரு ஆர்பிஎப்  மூத்த அதிகாரி கூறியதாவது: பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணம் செய்தால் தற்போது ₹500 அபராதம் விதிக்கப்படுகிறது. இதை ₹1000 ஆக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தவிர இ.டிக்கெட்டில் முறைகேடு செய்யும் நபர்களுக்கும் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை