மேலவை தேர்தலில் வெற்றிபெற 8 எம்எல்ஏ.க்களுக்கு பாஜ வலை: ‘ஆபரேஷன் தாமரை’ தீவிரம்

தினகரன்  தினகரன்
மேலவை தேர்தலில் வெற்றிபெற 8 எம்எல்ஏ.க்களுக்கு பாஜ வலை: ‘ஆபரேஷன் தாமரை’ தீவிரம்

பெங்களூரு: கர்நாடகா சட்ட மேலவையில் காலியாக உள்ள 3 இடங்களில் வெற்றி பெற, ஆபரேஷன் தாமரை மூலம் 8 எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாஜ களமிறங்கி இருக்கிறது.  கர்நாடக சட்டமேலவையில் உறுப்பினர்களாக இருந்த காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர், பாஜ.வை சேர்ந்த சோமண்ணா, ஈஸ்வரப்பா ஆகியோர்  கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால்,  இவர்களின் மேலவை உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இந்த 3 இடங்களுக்கான  தேர்தல் அடுத்த மாதம் 4ம் தேதி நடக்கிறது. இந்த 3  இடங்களுக்கு காங்கிரஸ் சார்பில் இரு வேட்பாளர்களும், மஜத சார்பில்  ஒரு வேட்பாளரும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாஜ சார்பில்  3 வேட்பாளர்களை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில்,  கூட்டணி கட்சிகளாக உள்ள காங்கிரஸ், மஜத மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏக்களின் பலம்  118 ஆக உள்ளது. சட்டப்ேபரவையில், பாஜவின் பலம் 104ஆக இருக்கிறது. இந்த  தேர்தலில் காங்கிரஸ், மஜத.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள்  அனைவரும் ஒற்றுமையாக இருந்து வாக்களித்தால், 3 இடங்களையும் இந்த கட்சிகள் கைப்பற்றுவது  உறுதி. ஆல், இரு கட்சிகளை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி  பாஜவுக்கு வாக்களித்தால், அதன் 3  வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள்.அதனால், 8 எம்எல்ஏ.க்களின் வாக்குகளை  பெற்று தனது 3 வேட்பாளர்களையும் வெற்றிபெற வைக்க பாஜ முடிவு  செய்துள்ளது. இதற்காக, ஆபரேஷன் தாமரை திட்டத்தை பயன்படுத்துவதாகவும், முதல்கட்டமாக மஜத, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 8 எம்எல்ஏ.க்களுக்கு தலா ₹5 கோடி  முன்பணம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த எம்எல்ஏ.க்கள் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மஜத எம்எல்ஏ.க்கள் 20 பேர் பாஜ.வுக்கு ஆதரவாக தாவி விட்டதாக கூறப்படும் நிலையில், மேலும் 8 எம்எல்ஏ.க்கள் விலை போயிருப்பதாக கூறப்படுவது காங்கிரஸ், மஜத கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை