மகமதுல்லா, இம்ருல் அரைசதம்: 249 ரன் எடுத்தது வங்கதேசம்

தினகரன்  தினகரன்
மகமதுல்லா, இம்ருல் அரைசதம்: 249 ரன் எடுத்தது வங்கதேசம்

அபுதாபி: சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மகமதுல்லா, இம்ருல் கேயெஸ் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடிக்க, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 249 ரன் சேர்த்தது.அபுதாபியில் நேற்று நடந்த மற்றொரு போட்டியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேசம், இந்தியாவிடமும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணியிடமும்  தோற்றுள்ளன. இதனால், இப்போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்குமே மிக முக்கியமானது என்ற நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. லிட்டன் தாஸ், நஜ்முல் ஹூசேன் ஆட்டத்தை தொடங்கினர். வழக்கம் போல் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே மிரட்டினர். ஆட்டத்தின் 5வது ஓவரில் அப்தாப் ஆலம் தனது வேகத்தில் நஜ்முல் (6)  விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து வந்த மிதுனை (1) முஜீப் ரகுமான் வெளியேற்றினார். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரகுமான் ஓரளவுக்கு தாக்குபிடித்தனர்.இந்த ஜோடி 63 ரன் சேர்த்த நிலையில், நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான், லிட்டன் தாஸ் (41) விக்கெட்டை வீழ்த்தி மீண்டும் ஆப்கன் வசம் ஆட்டத்தை கொண்டு வந்தார். ஷாகிப் அல் ஹசனும் (0), முஷ்பிகுரும் (33)  அடுத்தடுத்து ரன் அவுட்டாக, வங்கதேச அணி 87 ரன்னில் 5 விக்கெட்டை பறிகொடுத்து தவித்தது.இந்நிலையில், 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இம்ருல் கேயெஸ், மகமதுல்லா நிதானமாக ஆடி அணிக்கு கைகொடுத்தனர். ஆப்கன் பந்துவீச்சாளர்களை சமாளித்து பொறுப்புடன் ஆடிய இருவருமே அரைசதம் அடித்தனர். இந்த  ஜோடி 128 ரன் சேர்த்த நிலையில், மகமதுல்லா (74 ரன், 81 பந்து) அப்தாப் வேகத்தில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் மோர்டசாவும் (10) அப்தாப் பந்தில் ஆட்டமிழந்தார்.வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன் எடுத்தது. இம்ருல் கேயெஸ் 72 ரன் (89 பந்து), மெஹிதி ஹசன் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பந்துவீச்சில் ஆப்கானிஸ்தானின் அப்தாப் ஆலம் 3, முஜீப், ரஷித்கான் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து, 250 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்கியது.

மூலக்கதை