இந்தியா முழுவதும் தேவை அதிகரிப்பால் முட்டை விலை உயர வாய்ப்பு: என்இசிசி தலைவர் திடீர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
இந்தியா முழுவதும் தேவை அதிகரிப்பால் முட்டை விலை உயர வாய்ப்பு: என்இசிசி தலைவர் திடீர் அறிவிப்பு

நாமக்கல்: இந்தியா முழுவதும் தேவை அதிகரித்துள்ளதால், நாமக்கல்லில் முட்டை விலை நாளை உயரும் என் என்இசிசி தலைவர் அறிவித்துள்ளார். நாமக்கல் மண்டலத்தில் கடந்த இரண்டு வாரமாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு (என்இசிசி) தினமும் முட்டை விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இதற்கு  தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் என்இசிசி தனது நிலையை மாற்றிக்கொள்ளவில்லை. கடந்த 5 நாளில்  முட்டை விலையில் 30 காசு வரை குறைத்துள்ளது. இந்நிலையில், நாமக்கல்லில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவின் விலை நிர்ணய கூட்டம்  நடைபெற்றது. இதில், பேசிய தலைவர் டாக்டர் செல்வராஜ், “முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 330  காசாக தொடரும்” என அறிவித்தார்.இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு வாட்ஸ் அப்பில் என்இசிசி தலைவர் டாக்டர் செல்வராஜ் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.  அதன் விபரம் வருமாறு: இந்தியா  முழுவதும் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. ஐதராபாத் மண்டலத்தில் முட்டை விலையில் 5 காசும், பர்வாலாவில் 10 காசும் உயர்ந்துள்ளது. மற்ற  மண்டலங்களுடன் ஒப்பிடுகையில் நாமக்கல் மண்டலத்தில் 24ம் தேதி (நாளை) முட்டை விலை உயர வாய்ப்புள்ளது. எனவே, பண்ணையாளர்கள் 25 காசுக்கு மேல்  முட்டை விற்பனையில் மைனஸ் கொடுக்கவேண்டாம். கோழிப்பண்ணையாளர்கள் சந்தை நிலவரங்களுக்கேற்ப வியாபார யுக்திகளை பயன்படுத்தி லாபத்தை  பெருக்கிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை