ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: நாடு முழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறக்கூடிய வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறக்கூடிய அளவுக்கு புதிய திட்டம் ஒன்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் 10 கோடி குடும்பத்தை  சேர்ந்த 50 கோடி பேர் சிகிச்சை பெறும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது. இதற்கு ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் என்று பெயரிடப்பட்டது. மேலும், ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா அபியான்’  என்ற பெயரிலும் இந்த திட்டம் அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கிராமப்புறங்களை சேர்ந்த 8.03 கோடி குடும்பங்களும், நகர்புறத்தை சேர்ந்த 2.33 கோடி குடும்பங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு அடிப்படையில் இந்த திட்டத்தில் 10.36  கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஏழு வகையான பிரிவு அடிப்படையில் தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர். நகர்புறங்களில் 11 வகையாக இவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த 11 வகையில் துப்புரவு தொழிலாளர்கள், பிச்சை எடுப்போர், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், வீதியில் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்,  கட்டுமான தொழிலாளர்கள், சித்தாள்கள், கல்தச்சர்கள், கூலித்தொழிலாளர்கள், தினக்கூலிகள், பெயின்டர்கள், காவலாளிகள், தலை சுமை தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இணைக்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்பத்தில் எத்தனை பேர்  இருந்தாலும் அத்தனை பேரும் அதில் இணைக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் 1,354 வகையான மருத்துவ சிகிச்சை பெறலாம். இதில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துவிட்டன. தெலங்கானா, ஒடிசா, டெல்லி, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இதில்  இணையவில்லை. இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைத்தார்.

மூலக்கதை