இந்திய அணிக்கு 238 ரன்கள் இலக்கு

தினமலர்  தினமலர்
இந்திய அணிக்கு 238 ரன்கள் இலக்கு

துபாய்: ஆசிய கோப்பை 'சூப்பர்-4' சுற்றுப்போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அசத்த பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 237 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் அரை சதம் அடித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. துபாயில் நடக்கும் 'சூப்பர்-4' சுற்றுப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

'சுழல்' தாக்குதல்

பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக், பகர் ஜமான் ஜோடி துவக்கம் தந்தது. இமாம் 10 ரன்களில் அவுட்டானார். குல்தீப் 'சுழலில்' பகர் (31) சிக்கினார். ஜடேஜா பந்தில் பாபர் ஆசம் (9) ரன் அவுட்டானார். பின், இணைந்த கேப்டன் சர்பராஸ், சோயப் மாலிக் ஜோடி சிறப்பாக விளையாடியது. சகால் பந்தை மாலிக் சிக்சருக்கு பறக்கவிட்டார். பொறுப்புடன் செயல்பட்ட இவர் அரை சதம் எட்டினார். இந்த நேரத்தில் சர்பராசை (44) வெளியேற்றிய குல்தீப் இந்திய ரசிகர்களுக்கு நிம்மதி தந்தார். இருப்பினும், புவனேஷ்வரின் 42வது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ஆசிப் அலி வெறுப்பேற்றினார். பும்ரா 'வேகத்தில்' தொல்லை தந்த மாலிக் (78) ஆட்டமிழந்தார். சகால் பந்தில் ஆசிப் அலி (30) போல்டானார். ஷாதப் கானை (10) பும்ரா திருப்பி அனுப்பினார்.
பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்தது. நவாஸ் (15), ஹசன் அலி (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, சகால், குல்தீப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

50

இப்போட்டியில் ஆசிப் அலியை வெளியேற்றிய சகால் ஒரு நாள் அரங்கில் 50வது விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம், இந்த இலக்கை அதிவேகமாக (30 போட்டி) எட்டிய 5வது இந்திய பவுலரானார். முதலிடத்தில் அகார்கர் (23 போட்டி) உள்ளார்.

மூலக்கதை