பேச்சுவார்த்தைக்கு அவசரம் காட்டியது ஏன்? இம்ரான் கானுக்கு பாக்., எதிர்க்கட்சிகள் கேள்வி

தினமலர்  தினமலர்
பேச்சுவார்த்தைக்கு அவசரம் காட்டியது ஏன்? இம்ரான் கானுக்கு பாக்., எதிர்க்கட்சிகள் கேள்வி

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு அவசரம் காட்டிய இம்ரான் கானே, ராஜதந்திர தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

ரத்து

அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து, நியூயார்க் நகரில் ஐ.நா., பொதுக்கூட்டத்தின் போது இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், காஷ்மீரில் போலீசார் 3 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சென்று கொலை செய்தனர். புர்கான்வானிக்கு பாகிஸ்தானில் ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, இந்த சந்திப்பை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. இதற்கு பாகிஸ்தானில் முக்கிய எதிர்க்கட்சிகளான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் இம்ரான் கானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

பலவீனம்

இது தொடர்பாக, பாகிஸ்தான்முஸ்லிம் லீக் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான க்வாஜா முகமது ஆசிப் கூறுகையில், பேச்சுவார்த்தைக்கு இம்ரான் கான் அதிக ஆர்வம் காட்டியதால், நமது பலவீனத்தை வெளிக்காட்டியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவில், சகஜ நிலைக்கு திரும்புவதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் பாகிஸ்தானின் பெருமையை மதிக்க வேண்டும். இந்தியாவும், அமெரிக்காவும், பாகிஸ்தானுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றன. ஆனால், இம்ரான் கான் பயங்கரவாதம் குறித்து கடிதத்தில் குறிப்பிடுகிறார். இது நமது பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மிரட்டலா?

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணை தலைவரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான ஷெரி ரெஹ்மான் கூறுகையில், பேச்சுவார்த்தை துவக்குவதற்கு முன்னர், இம்ரான் கான் வீட்டுப்பாடம் செய்ய வேண்டும். முதர்ச்சியடையாமல் இருப்பதற்காகவும், பொறுப்பு இல்லாமல் இருப்பதற்காகவும் இந்திய அரசும், அந்நாட்டு ராணுவ தளபதியும் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் பாகிஸ்தானை மிரட்டுகிறார்களா? தூதரக ரீதியாகவும், வழக்கமான நடவடிக்கைகளையும் இந்தியா மீறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை