சில வரி செய்திகள்-உலகம்

தினமலர்  தினமலர்

'ஆணவத்தை காட்டுகிறது'
இஸ்லாமாபாத்: பயங்கரவாத சம்பவம் தொடர்வதால், இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பை, மத்திய அரசு ரத்து செய்தது. 'இந்தியாவின் எதிர்மறை முடிவால் அதிருப்தி அடைந்துள்ளேன். பேச்சை ரத்து செய்துள்ளது, அதன் ஆணவத்தை காட்டுவதாக அமைந்துள்ளது. மிகப் பெரிய பொறுப்பில், சிறிய மனது உடையோர் உள்ளனர்; அவர்களிடம் தொலைநோக்கு பார்வை இல்லை' என, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், சமூகதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தலைமையாசிரியராக பயங்கரவாதி
காத்மாண்டு: அண்டை நாடான, நேபாளத்தின் சன்சரி மாவட்டத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, தனியார் பள்ளி தலைமையாசிரியர், குர்ஷித் ஆலம், இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு தலைவன் என்பது உறுதியாகியுள்ளது. 1993ல் நடந்த மும்பை தாக்குதல் தொடர்பாக, இந்திய உளவு துறையால் தேடப்பட்டவன்.
இந்தியா முன்னேற்றம்
வாஷிங்டன்: குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதில், இந்தியா உட்பட, 14 நாடுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக, அமெரிக்க தொழிலாளர் துறை கூறியுள்ளது. தேசிய அளவில் அமலாக்கப்பட்ட தொழிலாளர் நல சட்டம், நிதி ஒதுக்கீடு, ஆய்வாளர்கள் எண்ணிக்கை, விதி மீறல் மற்றும் அதற்காக வசூலிக்கப்பட்ட அபராதம் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து வெளியிடும்படி, இந்திய அரசை, அமெரிக்க தொழிலாளர் துறை வலியுறுத்தி உள்ளது.
24 வீரர்கள் பலி
டெஹ்ரான்: இஸ்லாமிய குடியரசு நாடான ஈரானில், நேற்று காலை ராணுவ அணிவகுப்பு நடந்தது. அப்போது, காக்கி சீருடை அணிந்த நான்கு பேர் துப்பாக்கியால் சுட்டதில், 24 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பதில் தாக்குதலில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; இருவர் கைது செய்யப்பட்டனர்.

மூலக்கதை