1, 2, 3 நம்பர் லாட்டரி பெயரில்... பகல் கொள்ளை! 'போலீஸ் ஆசி'யுடன் துணிகரம்

தினமலர்  தினமலர்

உடுமலை;தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், ஆங்காங்கு கேரள லாட்டரி சீட்டுகளும், அவற்றின் 'ரிசல்ட்' அடிப்படையில் ஒரு நம்பர், இரு நம்பர், மூன்று நம்பர் என, போலி லாட்டரி சீட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர், அமராவதிநகர், தளி, குடிமங்கலம் பகுதிகளில் கேரள மாநில லாட்டரிச் சீட்டுகளும், ஒரு நம்பர், இரு நம்பர் போலி லாட்டரிகளும் தாரளமாக விற்கப்படுகின்றன. மொபைல் போனில் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகச் சென்று தருகின்றனர். லாட்டரி ரிசல்ட்களை 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்புகின்றனர்.பொழுது விடிந்ததும் இந்த லாட்டரி சீட்டுகளை வாங்க கும்பல், கும்பலாக ஆட்கள் ஆங்காங்கு திரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கூலித்தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்.
இவர்களின் பரிசு ஆசையை மூலதனமாக்கி, மோசடி கும்பல் போலி லாட்டரி சீட்டுகளை விற்று அப்பாவிகளை ஏமாற்றி பணத்தை பகல் கொள்ளையடித்து வருகிறது.மொத்த லாட்டரி ஏஜன்ட்களில் சிலருக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், 'ரிசல்ட் கமிஷன் இல்லை' என்ற அறிவிப்பையும் மிகத் தைரியமாக வெளிப்படையாக வைத்துள்ளனர். இதற்கெல்லாம் காரணம், போலீசாரின் பரிபூரண ஆசி. மாதாமாதம் மாமூல் பணம் தவறாமல் பட்டுவாடா செய்யப்பட்டுவிடுவதால், அப்பாவி மக்களை ஏமாற்ற 'லைசென்ஸ்' வழங்கிவிட்டனர்.
சிலருக்கு பரிசு விழுந்தாலும் பணத்தை தராமல் மோசடி செய்வதாகவும் கூறப்படுகிறது.சட்டவிரோதமாக வாங்கிய லாட்டரிக்கு பரிசுத் தொகை கிடைக்கவில்லை என புகார் அளிக்க முடியாமல் பலரும் புலம்பித் தவிக்கின்றனர். அப்படியே ஒரு சிலர் மோசடி நபர்கள் மீது நடவடிக்கை கோரி புகார் அளித்தாலும், அவர்கள் மீதே வழக்குப்போடுவதாக மிரட்டிவிரட்டிவிட்ட சம்பவமும் நடந்துள்ளது.
'ரூ.75 ஆயிரம் இழந்தேன்'
உடுமலையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பழனிச்சாமி, 39 கூறியதாவது:லாட்டரி சீட்டு வாங்கி பழக்கமில்லாத என்னை, ஏஜன்ட் ஒருவர் சில மாதங்களுக்கு முன் சந்தித்தார். 'ஒரு நம்பர் லாட்டரியை, 50, 100 ரூபாய் மதிப்பில் வாங்கிக்கொள்ளுங்கள்.பரிசு விழுந்தால் 5,000, 10 ஆயிரம் கிடைக்கும்' என்றார். ஒரே ஒரு முறைதானே வாங்கினால் என்ன என்று நினைத்து வாங்கினேன். முதல் முறை பரிசு விழவில்லை; இரண்டாம் முறை 500 ரூபாய்க்கு வாங்கியபோது, 1,000 ரூபாய் பரிசாக தந்தனர்.
அதன்பின், அன்றாடம் அந்த ஏஜன்ட்டுக்காக காத்திருக்க வேண்டிய மனப்போக்கிற்கு தள்ளப்பட்டேன்; ஏறத்தாழ அடிமையானேன். கடந்த மாதம் வரை, 75 ஆயிரம் ரூபாய் வரை ஏஜன்ட்கள், ஒரு நம்பர் லாட்டரி மூலம் என்னிடம் பறித்துவிட்டனர்.
அவர்கள் நடத்தும் பரிசு சீட்டு முறை எதுவும் சட்டப்படியானது அல்ல; கேரளாவில் அன்றைய தினம் அறிவிக்கப்படும் ஏதாவது ஒரு லாட்டரி சீட்டின், முதல் பரிசு, 2ம் பரிசுக்கான சீரியல் எண்களை வைத்து, குத்துமதிப்பாகவே பரிசு தந்து ஏமாற்றுகின்றனர்.
இதையறிந்து லாட்டரி சீட்டு கும்பலுடனான தொடர்பை முறித்துக் கொண்டேன். என்னைப் போன்றே எண்ணற்ற இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் நேர்மையான முறையில் நடவடிக்கை எடுத்து, லாட்டரி ஏஜன்ட்களை சிறையில் தள்ள வேண்டும்.இவ்வாறு, பழனிச்சாமி தெரிவித்தார்.

மூலக்கதை