பெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்....... மோடி மீது இம்ரான் கான் சாடல்

தினகரன்  தினகரன்
பெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்....... மோடி மீது இம்ரான் கான் சாடல்

லாகூர்: பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளதை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச இந்தியா சம்மதித்தது. இதற்கிடையே, காஷ்மீரில் மூன்று போலீசார் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படை வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை பாகிஸ்தான் ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியது. இந்த இரு சம்பவங்களை அடுத்து, இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது என பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இந்திய அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்தது. இது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.இந்நிலையில், இந்தியாவின் நடவடிக்கை குறித்து பாக்., பிரதமர் இம்ரான் கான் டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது: அமைதி பேச்சு வார்த்தைக்கான எனது அழைப்புக்கு இந்தியாவின் முரட்டுதனமான மற்றும் எதிர்மறை பதிலால் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளேன். எனினும், என் வாழ்நாள் முழுவதும் பெரிய பதவிகளை வகித்து வந்த சிறிய மனிதர்களை பார்த்துள்ளேன். அவர்களுக்கு தொலை நோக்கு பார்வை இல்லை\' என  குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை