ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்திய பாகிஸ்தான்!

PARIS TAMIL  PARIS TAMIL
ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்திய பாகிஸ்தான்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.
 
14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் அடுத்த சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. தங்களது இரண்டு லீக்கிலும் தோல்வியை தழுவிய இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறின. 
 
இந்நிலையில், சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியது. இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாதும், இசானுல்லா ஜனாதும் களமிறங்கினர்.
 
அந்த அணி 32 ரன்களுக்கு முதல் 2 விக்கெட்டுக்ளை இழந்தது. அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ரஹமத் ஷாவும்,  ஹஷ்மதுல்லா ஷகிதியும் பொறுப்புடன் விளையாடினர். இந்த ஜோடி 63 ரன்களை சேர்த்தது. ரஹமத் ஷா 36 ரன்னில் அவுட்டானார்.
 
அடுத்து இறங்கிய அஸ்கர் ஆப்கான் ஷாகிதியுடன் இணைந்து 94 ரன்கள் ஜோடி சேர்த்தார். இதனால் அணியின் எண்ணிக்கை 200ஐ நெருங்கியது. இருவரும் அரை சதமடித்தனர். நிதானமாக ஆடிய அஸ்கர் ஆப்கான் 67 ரன்கள் எடுத்து  வெளியேறினார்.
 
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்களை எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய    
ஹஷ்மதுல்லா ஷகிதி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 97 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
 
பாகிஸ்தான் தரப்பில் மொகமது நவாஸ் 3 விக்கெட்டும்,  ஷகின் அப்ரிதி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி சேசிங் செய்ய தொடங்கியது. 
 
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பகர் ஜமான் மற்றும் இமாம் உல்-அக் ஆகியோர் களமிறங்கினர். முஜூப் அர் ரகுமான் வீசிய முதல் ஓவரிலேயே பகர் ஜமான் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.
 
அதன் பின்னர் இமாம் உல்-அக் உடன் பாபர் அசம் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளார்கள் திணறினர். ஒருவழியாக 33வது ஓவரில் நஜிப்புல்லா வீசிய பந்தில் 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இமாம் உல்-அக் ஆட்டமிழந்து வெளியேறினார்.
 
2வது விக்கெட்டுக்கு இமாம் உல்-அக் மற்றும் பாபர் அசம் ஜோடி இணைந்து 154 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய ஹரிஸ் சோகய்ல் 13 , சர்பிராஸ் அகமது 8 , ஆசிப் அலி 7 ரன்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 
 
இதனால் ஆப்கானிஸ்தான் அணியின் கை ஓங்கியது, கடைசி முன்று ஓவர்களுக்கு 29 ரன்கள் அடிக்க வேண்டிய இக்கட்டான நிலை பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டது. 
 
எனினும் சோயப் மாலிக்கின் அதிரடியால் அந்த அணி 49.3 ஓவர்கள் முடிவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 258 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. 
 
சோயப் மாலிக்  51 ரன்களுடனும் ஹசன் அலி 6 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும் முஜீப் அர் ரகுமான் 2 விக்கெட்டையும் அப்டாப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மூலக்கதை