கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைதான பிஷப் பிராங்கோவை காவலில் எடுக்க முடிவு: மேலும் பல பாதிரியார்கள் சிக்க வாய்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைதான பிஷப் பிராங்கோவை காவலில் எடுக்க முடிவு: மேலும் பல பாதிரியார்கள் சிக்க வாய்ப்பு

திருவனந்தபுரம்: பலாத்கார வழக்கில் நேற்று கைதான பிஷப் பிராங்கோவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

கன்னியாஸ்திரி பலாத்கார புகாரில் சிக்கிய ஜலந்தரில் பிஷப்பாக இருந்த பிராங்கோவை கடந்த 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இதன்படி 19ம் தேதி காலை 11 மணிக்கு கொச்சி திருப்பூணிதுறாவில் உள்ள குற்றபிரிவு எஸ்பி அலுவலகத்தில் ஆஜரானார்.

அப்போது அவர் பிஷப் உடையில் தான் வந்தார். முதல் நாள் பிஷப்பிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டனர்.

பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. சில கேள்விகளுக்கு மட்டும் மறுப்பு தெரிவித்தார்.

2ம் நாள் மீண்டும் ஆஜரானார். அன்றைய விசாரணையின் முடிவில் பிஷப் கைது செய்யப்படலாம் என தகவல் பரவியது.

ஆனால் அன்றும் இரவு 7 மணியளவில் மறுநாள் காலை 10. 30 மணிக்கு ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.

3ம் நாளாக நேற்றும் விசாரணைக்கு ஆஜரானார். நேற்றும் அவர் பிஷப் உடையில்தான் வந்தார்.

நேற்று மதியத்துக்கு பின்னர் எந்த நேரத்திலும் பிஷப் கைது செய்யப்படலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியாயின. இதற்கிடைேய இந்த வழக்கை விசாரிக்கும் கோட்டயம் எஸ்பி ஹரிசங்கர், கொச்சி ஐஜி விஜய்தாக்கரேவை சந்திக்க சென்றார்.

அதன்பின் வெளியே வந்த எஸ்பி ஹரிசங்கர் பிஷப்பை கைது செய்ய தீர்மானித்துள்ளதாக கூறினார். அவர் திருப்பூணித்துறா எஸ்பி அலுவலகத்திற்கு வந்தபின் இரவு 8 மணியளவில் பிஷப் கைது செய்யப்பட்டார் என  அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பிஷப்புக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தன்னை சதித்திட்டம் தீட்டி சிக்க வைத்ததாக அவர் கூறியிருந்தார்.

விசாரணையில் அது பொய் என தெரியவந்துள்ளது. அவர் குற்றம் செய்துள்ளாரா என இப்போது தெரிவிக்க முடியாது.

அவருக்கு உதவியவர்களையும், ஆதாரத்தை அழித்தவர்களையும் கைது செய்வோம். மருத்துவபரிசோதனைக்கு பின் நாளை (இன்று) பாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்.

பிஷப் மீது பலாத்காரம், இயற்கையை மீறி வன்புணர்ச்சி, மிரட்டுதல், சிறை வைத்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என கூறினார்.



தொடர்ந்து இரவு 9. 15 மணியளவில் பிஷப் பிராங்கோ திருப்பூணிதுறா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பின் அவரை கோட்டயம் போலீஸ் கிளப்புக்கு வைக்கம் டிஎஸ்பி சுபாசின் ஜீப்பில் போலீசார் அழைத்து சென்றனர்.

கோட்டயம் அருகே சென்றபோது தனக்கு நெஞ்சு வலிப்பதாக அவர் கூறினார். அவரை கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த பரிசோதனை, இசிஜி உள்பட பல பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இசிஜியில் மட்டும் சிறிய மாற்றம் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று காலை 8. 30 மணிவரை அவரை பரிசோதித்தனர்.

வேறு எந்த பிரச்னையும் இல்லாததால் அவர் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன்பின் அவரை பாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ேபாலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.



3 நாளில் 23 மணி நேரம் விசாரணை
பிஷப் பிராங்கோ விசாரணைக்காக 19ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜரானார் அன்று காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6 மணி வரை 7 மணி நேரம் நீடித்தது. 2ம் நாள் காலை 11 முதல் மாலை 7 மணி வரை என 8 மணி நேரம் நீடித்தது.

3ம் நாளான நேற்று காலை 10. 30 மணிமுதல் மாலை 6. 30 மணிவரை 8 மணி நேரம் நீடித்தது. 3 நாட்களும் சேர்த்து மொத்தம் 23 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை நாட்களில் இரவு பிஷப் அங்குள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். இந்த விசாரணையின்போது பிஷப்பிடம் மொத்தம் 350 கேள்விகளும், 500 கிளை கேள்விகளும் கேட்கப்பட்டன.

காவலில்  எடுக்க முடிவு
பிஷப் பிராங்கோவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போலீசார், 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தீர்மானித்துள்ளனர்.

காவல் எடுக்க அனுமதி கிடைத்தால் அவரை குரவிலங்காடு ஆசிரமம் மற்றும் பலாத்காரம் நடந்ததாக கூறப்படும் இடங்களுக்கு நேரடியாக அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர். இதில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

கைதுக்கான முக்கிய ஆதாரங்கள்
* கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனியார் சிறைக்கு மருத்துவ பரிசோதனை அறிக்கை.
* சங்கனாச்சேரி நீதிமன்றத்தில் கன்னியாஸ்திரி அளித்த ரகசிய வாக்குமூலம்.

அதில் 13 முறை தன்னை பலாத்காரம் செய்ததாகவும், அந்த தேதி, இடம் உள்ளிட்ட விவரங்களை அளித்துள்ளார்.
* கன்னியாஸ்திரி கூறிய நாட்களில் பிஷப் பிராங்கோ அவருடன் இருந்ததற்கான ஆதாரங்கள்.

அதற்கான ஆவணங்கள்.
* பிஷப் பிராங்கோ செல்போனில் கன்னியாஸ்திரிக்கு அனுப்பி மெசேஜ்.
* பிஷப் பிராங்கோ பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி தங்களிடம் கூறினார் என்று பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் அளித்த வாக்குமூலம்.
* கன்னியாஸ்திரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் தான் தன் மீது பலாத்கார புகார் அளித்ததாக பிஷப் கூறியுள்ளார். ஆனால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே அட்டப்பாடியில் உள்ள தியான மையத்திற்கு சென்ற கன்னியாஸ்திரி பிஷப் தன்னை பலாத்காரம் செய்ததற்காக பாவமன்னிப்பு கேட்ட விவரம்.

ஆகிய ஆவணங்கள் பிஷப்பை கைது செய்வதற்கு முக்கிய ஆதாரங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

.

மூலக்கதை