சீனாவுக்கு தடை விதிப்பதா? : நெருப்போடு விளையாடாதே .... அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
சீனாவுக்கு தடை விதிப்பதா? : நெருப்போடு விளையாடாதே .... அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவிடம் ராணுவ ஆயுதங்களை கொள்முதல் செய்ததால் முதல் முறையாக சீனாவுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள விவகாரம் பரபரப்பாகி உள்ளது. இதற்கான விளைவுகள் மிக பயங்கரமாக இருக்கும் என ரஷ்யாவும், சீனாவும் கூட்டாக இணைந்து அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. ‘நெருப்போடு விளையாடாதே’ என ரஷ்யா கடுமையாக எச்சரித்துள்ளது.உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க தேர்தலில் தலையீடு ஆகியவற்றால் ரஷ்யா மீது அதிபர் டிரம்ப் நிர்வாகம் சில தடைகளை விதித்துள்ளது. அதோடு, ரஷ்யாவை குறிவைத்து அந்நாட்டுடன் ராணுவ ஆயுத கொள்முதலில் ஈடுபடும் நாடுகளையும், எதிரியாக கருதி பொருளாதார தடை மூலம் பதிலடி கொடுக்கும் சட்டமும் (சிஏஏடிஎஸ்ஏ) கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை இந்த சட்டத்தின் மூலம் ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகள் மீது மட்டுமே அமெரிக்கா தடைகளை விதித்திருந்தது. இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்களை வாங்கியதற்காக சீனாவுக்கு முதல் முறையாக அமெரிக்கா தடை விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவிடமிருந்து சீனா மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சீன ராணுவத்தின் இடிடி நிறுவனம் 10 ரஷ்ய சுகாய் சு-35, எஸ்-400 வகை ஏவுகணைகளையும் வாங்கியுள்ளது. இதன் காரணமாக, இடிடி நிறுவனத்தின் மீதும், அதன் இயக்குநர் லி சாங்பு மீதும் சிஏஏடிஎஸ்ஏ சட்டத்தின் கீழ் அமெரிக்கா தடை விதித்துள்ளது.இந்த தடையால் ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்கா மீதும் கடும் ஆத்திரமடைந்துள்ளன. ரஷ்யாவின் வெளியுறவு துணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் விடுத்துள்ள அறிக்கையில், ‘ரஷ்யா-அமெரிக்கா உறவில் அழுத்தங்களை தூண்டிவிடும்போது, அவர்கள் மறந்து போன உலகளாவிய நிலைத்தன்மை கொள்கையை  நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. நெருப்புடன் விளையாடுவது சிறுபிள்ளைத்தனமானது. அது மிகப்பெரிய பயங்கரத்தில் முடியும். இதுபோன்ற எத்தனை தடைகள் விதித்து அழுத்தம் தந்தாலும், ரஷ்யாவை அதன் பாதையை விட்டு விலக வைக்க முடியாது’ என கூறி உள்ளார். இந்த தடை குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த தடை முழுக்க முழுக்க ரஷ்யாவை மட்டுமே குறிவைத்து இருப்பது. மற்றபடி வேறெந்த நாட்டின் ராணுவ பலத்தையும் குறைக்க வேண்டுமென்ற உள்நோக்கம் எங்களுக்கு இல்லை. அதே நேரத்தில் ரஷ்யாவுடன் ராணுவ உறவு வைத்துக் கொண்டதற்கான விலையை சம்மந்தப்பட்ட நாடுகள் தந்தே ஆக வேண்டும். அது சீனா என்றில்லை. எந்த நாடாக இருந்தாலும் தடை விதிப்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது’’ என்றனர். தவறை திருத்திக் கொண்டால் நல்லது: சீனாவும் எச்சரிக்கைதங்கள் நாடு மீது விதிக்கப்பட்ட தடை பற்றி சீன வெளியுறவுத் துறை செய்தித்  தொடர்பாளர் ஜெங்க் சுயாங் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் காரணமற்ற இந்த  நடவடிக்கைக்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. சர்வதேச விதிமுறைகளை  அமெரிக்கா மீறுகிறது. இந்த தவறை அவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும். தடையை  வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் அதன் பயங்கர விளைவுகளை சந்திக்க  வேண்டியிருக்கும்’’ என்றார்.ரஷ்யா - சீனா நெருக்கம்அமெரிக்கா, சீனா இடையே ஏற்கனவே வர்த்தக  போர் முற்றியுள்ள நிலையில், தற்போது அமெரிக்கா விதித்துள்ள தடையால் இருநாட்டு உறவில் மேலும்  விரிசல் ஏற்பட்டுள்ளது. அதோடு, அமெரிக்காவுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் வல்லரசு நாடுகளான சீனாவும், ரஷ்யாவும் மேலும் நெருக்கமாக இந்த தடை வழி வகுத்துள்ளது.என்ன பாதிப்பு?இந்த தடையால், இடிடி நிறுவனத்திற்கு எந்த வெளிநாட்டு ஏற்றுமதி லைசன்சும் கிடைக்காது. அமெரிக்க நிதி அமைப்பையோ, அந்நிய செலாவணி பரிவர்த்தனையையோ மேற்கொள்ள முடியாது. அமெரிக்காவில் உள்ள அதன் சொத்துகள் முடக்கப்படும். அதே போல, இயக்குநர் சாங்புவின் அமெரிக்காவின் விசா ரத்து செய்யப்படும். அவரின் அமெரிக்க சொத்துகளும் முடக்கப்படும். இந்தியாவுக்கும் மிரட்டல்:நிலத்திலிருந்து வானில் உள்ள இலக்கை தகர்க்கும் ரஷ்யாவின் எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே ரஷ்யாவிடம் ராணுவ ஆயுதங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை என அமெரிக்கா மிரட்டி வருகிறது. சீனாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா மீதும் இந்த தடை பாயும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் 2+2 பேச்சுவார்த்தையில், இந்தியா மீது எந்த தடை விதிக்கும் நோக்கமில்லை என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்தார். தற்போது, அதிபர் டிரம்ப் நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ரஷ்யாவுடன் ராணுவ ஆயுத கொள்முதல் செய்யும் நாடுகள் ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக யோசித்து செயல்பட வேண்டும். எஸ்-400 போன்ற ஆயுதங்களை கொள்முதல் செய்தால் தடை விதிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’’ என கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை