குளக்கரை, ஏரிக்கரையில் பனை விதைக்க இலக்கு ஒரு லட்சம்!களமிறங்கிய குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

தினமலர்  தினமலர்
குளக்கரை, ஏரிக்கரையில் பனை விதைக்க இலக்கு ஒரு லட்சம்!களமிறங்கிய குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

கோவை;கோவையில் உள்ள குளக்கரை, ஏரி, ஆற்றுப்படுகை, வாய்க்கால் மற்றும் வன எல்லையில், ஒரே நாளில் ஒரு லட்சம் பனை விதைகளை விதைக்க, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு திட்டமிட்டு உள்ளது. இத்திருவிழா, அக்., 7ல் நடக்கிறது. பனை விதைகள் சேகரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
தமிழரின் அடையாளம் பனை. அவை, சமீபகாலமாக போதிய பராமரிப்பின்றி அழிந்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் சொற்பமான அளவு பனை மரங்களே மிஞ்சியுள்ளன. இம்மரம் வேர்கள் வழியே தண்ணீரை இழுத்து சேமித்து, தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளும். தண்ணீரை இழுக்கும்போது, நிலத்துக்குள் உள்செலுத்தப்படும்.
இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை அளவுக்கு அதிகமாகவே பெய்ததால், நொய்யலாறு மற்றும் கோவையில் இருக்கும் குளங்கள் நிரம்பியிருக்கின்றன. நீர்வளத்தை நிலத்தடி நீராக சேமிக்க, பனை மரங்கள் தேவை. ஏரி கரைகளை மண் அரிப்பு இல்லாமல் தடுக்கும் சக்தியும் பனைக்கு உண்டு. பனை மரத்தின் பலன்களும் ஏராளம்.
பதனீர், நுங்கு, உள்ளிட்ட உணவு பொருட்கள் கொடுப்பது மட்டுமின்றி, பனையோலைகள் விசிறி செய்யவும், கூரை வேயவும் பயன்படுகின்றன. இப்போதைக்கு பேரூர் பெரிய குளத்தில் மட்டும் அரை கி.மீ., துாரத்துக்கு பனை மரங்கள் தொடர்ச்சியாக இருக்கின்றன. குறிச்சி மற்றும் உக்கடம் பெரிய குளம் பகுதிகளில் இருந்த மரங்கள், சாலை விரிவாக்கத்துக்காக அழிக்கப்பட்டு விட்டன.அதனால், 'பனை திணை திருவிழா' என்ற தலைப்பில், ஒரு லட்சம் பனை விதைகளை நடுவதை இலக்காகக் கொண்டு, கோவைகுளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் களமிறங்கி உள்ளனர். ஏரிக்கரை, வன எல்லை, ஆற்றுப்படுகை, வாய்க்கால்கள், விவசாய நிலங்களின் கரையோரங்களில் பனை வளர்க்க, முடிவு செய்துள்ளனர்.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறியதாவது:குளக்கரை மற்றும் வன எல்லையில் பனை மரம் வளர்க்க, பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை அனுமதி கேட்டிருக்கிறோம். அக்., 7ல் 'பனை திணை திருவிழா' என்ற பெயரில், ஒரே நாளில் ஒரு லட்சம் பனை விதைகளை நட தீர்மானித்திருக்கிறோம். அக்.,ல் வடகிழக்கு பருவ மழை துவங்கும் என்பதால், அம்மாதத்தை தேர்வு செய்துள்ளோம்.
பனை விதைகள் செங்கல் சூளைகளிலும், சுண்ணாம்பு காலவாய்களிலும் அதிகளவில் எரிக்க பயன்படுகின்றன. மாநில மரமான அவற்றின் விதைகளை எரிக்க பயன்படுத்தக்கூடாது என, தமிழக அரசுக்கு வேண்டுகோளும் விடுக்கிறோம். எங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
விதைகளை பிரித்தெடுக்க...பனை திருவிழாவுக்காக, 50 ஆயிரம் விதைகள், நாகையிலிருந்து தருவிக்கப்படுகின்றன. கோவை சுற்றுவட்டார பகுதிகளில் சேகரித்த, 50 ஆயிரம் விதைகள், பனம்பழமாக இருக்கின்றன. அவற்றில் இருந்து விதைகளை பிரித்தெடுக்கும் பணி, பேரூர் தமிழ் கல்லுாரியில் நாளை (ஞாயிறு) காலை, 7:00 முதல், 9:30 மணி வரை நடைபெறும். இப்பணிக்கு, 100 தன்னார்வலர்கள் தேவை. தொடர்புக்கு: 80157 14790, 98948 26194.

மூலக்கதை