ஹஷ்மதுல்லா 97, அஸ்கர் 67 ரன் விளாசல் : ஆப்கானிஸ்தான் 257 ரன் குவிப்பு

தினகரன்  தினகரன்
ஹஷ்மதுல்லா 97, அஸ்கர் 67 ரன் விளாசல் : ஆப்கானிஸ்தான் 257 ரன் குவிப்பு

அபுதாபி: பாகிஸ்தான் அணியுடனான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று லீக் ஆட்டத்தில்,  ஹஷ்மதுல்லா - கேப்டன் அஸ்கர் ஜோடியின் அபார ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன் குவித்தது.ஷேக் சையது ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக முகமது ஷஷாத், இசானுல்லா களமிறங்கினர். இசானுல்லா 10 ரன் எடுத்து முகமது நவாஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சர்பராஸ் அகமதுவிடம் பிடிபட்டார். ஷஷாத் 20 ரன், ரகமத் ஷா 36 ரன் எடுத்து நவாஸ் பந்துவீச்சில் அவரிடமே பிடிபட, ஆப்கானிஸ்தான் 94 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.இந்த நிலையில், ஹஷ்மதுல்லா - கேப்டன் அஸ்கர் ஆப்கன் ஜோடி 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி 94 ரன் சேர்த்தது. அஸ்கர் 67 ரன் (56 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்), முகமது நபி 7, நஜிபுல்லா ஸத்ரன் 5 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன் குவித்தது. அபாரமாக விளையாடிய ஹஷ்மதுல்லா ஷாகிதி 97 ரன் (118 பந்து, 7 பவுண்டரி), குல்பாதின் 10 ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர், பாகிஸ்தான் பந்துவீச்சில் முகமது நவாஸ் 3, ஷாகீன் அப்ரிடி 2, ஹசன் அலி 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.

மூலக்கதை