நவாஸ் ஷெரீப் விடுதலைக்கு சவுதி அரேபியா உதவியதா?

தினகரன்  தினகரன்
நவாஸ் ஷெரீப் விடுதலைக்கு சவுதி அரேபியா உதவியதா?

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் சவுதி அரேபியாவுக்கு தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் பிரதமராக இருந்த  நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம், மருமகன் முகமது சப்தார் ஆகியோர் ஊழல் பணம் மூலம் லண்டனில் 4 சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜூலை 6ம் தேதி அவர்களுக்கு தலா 10 ஆண்டு, 7 ஆண்டு, ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் மூவரும் அடைக்கப்பட்டிருந்தனர்.இந்த நிலையில், கடந்த புதன்கிழமை நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட 3 பேரின் சிறை தண்டனையை ரத்து செய்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிறையில் இருந்து 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக பாகிஸ்தானில் வெளியாகும் ‘டான்’ பத்திரிகை சந்தேகத்தை எழுப்பியிருந்தது. அதில், பிரதமர் இம்ரான்கான் சவுதி அரேபியா சென்றபோது, அந்த நாடு கொடுத்த அழுத்தம் காரணமாகவே நவாஸ் விடுதலை செய்யப்பட்டதாகவும், அவர் சவுதி சென்றிருந்த நேரத்தில் நவாஸ் விடுதலை செய்யயப்பட்டது இதை உறுதி படுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பாவத் சவுத்ரி கூறியதாவது:நவாசை விடுதலை செய்ய  சவுதி அரேபியா கோரிக்கை விடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறேன். எந்த நாடும் நவாசை விடுதலை செய்ய கோரிக்கை வைக்கவில்லை. விடுதலை செய்ய கோரிக்கை வைக்கும் அளவுக்கு நவாஸ் ஒன்றும் சவுதி அரேபியாவுக்கு முக்கியமான நபர் அல்ல. அவரது விடுதலை பற்றிய விவாதமே பிரதமர் இம்ரான்கானின் சவுதி பயணத்தின் போது எழவில்லை. நவாஸ் ஊழல் செய்த பணத்தை நாட்டுக்கு திரும்ப கொண்டு வருவதே மிக முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை