மாநகராட்சி சுகாதார பணிகளில் தொய்வு; தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
மாநகராட்சி சுகாதார பணிகளில் தொய்வு; தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

சென்னை : 'சென்னையில், சுகாதார பணிகளில் தொய்வு ஏற்படுத்தும் வகையில், சரிவர செயல்படாத அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை மாநகராட்சி கமிஷனர், கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைத்துறை சார்பில், 19 ஆயிரத்து, 200 துப்புரவு பணியாளர்கள் வாயிலாக, தினமும், 5,400 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
விநாயகர் சிலை கரைப்பு காரணமாக, செப்., 16ல், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டல கடற்பகுதியில், 223 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டன. மாநகராட்சியில் சேகரிக்கப்படும், 60 டன் மக்கும் குப்பை, 'பயோ' எரிவாயு வாயிலாக பதனிடப்படுகிறது.
ஒவ்வொரு புதன் கிழமையும், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும், 470 டன் பிளாஸ்டிக் குப்பை, தார் சாலை போன்ற பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. திடக்கழிவு முறைகள் குறித்து, பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், 200 வார்டுகளிலும் பழுதடைந்த குப்பை தொட்டிகள் உடனுக்குடன் மாற்றப்பட்டு, நிரம்பி வழியும் குப்பை தொட்டிகளை கண்டறிந்து, கூடுதல் லாரிகள் வாயிலாக குப்பை அகற்றப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை சம்பந்தப்பட்ட குறைகளை தீர்க்கும் வகையில் துவக்கப்பட்ட, 'swachhata app' என்ற செயலியை, 14 ஆயிரத்து, 83 பேர் பதிவிறக்கம் செய்து உள்ளனர். இதன் வாயிலாக வந்த, 10 ஆயிரத்து, 446 புகார் மீது, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதிகளில், துாய்மை மற்றும் சுகாதார பணிகளில் தொய்வு ஏற்படுத்தும் வகையில், சரிவர செயல்படாத அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை