அடையாளம் இழந்த அணைப்பாளையம் குளத்தை சீரமைக்கலாமே! தடுப்பணையை தூர்வாரினால் தண்ணீர் தேங்கும்

தினமலர்  தினமலர்
அடையாளம் இழந்த அணைப்பாளையம் குளத்தை சீரமைக்கலாமே! தடுப்பணையை தூர்வாரினால் தண்ணீர் தேங்கும்

திருப்பூர்:சாயக்கழிவு நீர் தேங்காமல் இருப்பதற்காக, நொய்யல் தடுப்பணை இடிக்கப்பட்டதால், 55 ஏக்கர் பரப்பளவு கொண்ட, அணைப்பாளையம் குளம், சீமைக் கருவேல மரக்காடு போல் மாறியுள்ளது. குளத் தில் தண்ணீரை தேக்க, மாவட்ட நிர்வாகமும், சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பில், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் செயல்படுத்தும் முன், நீர்நிலைகளில் கழிவுநீர் திறந்து விடப்பட்டது. ஓடை, சிற்றோடை வழியாக, சாயக்கழிவுநீர் நொய் யலில் சென்றது. சாயக்கழிவுநீர் நொய்யல் தடுப்பணைகளில் தேங்கிய போது, கரையோர பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது.
கிணற்று தண்ணீர், பல்வேறு நிறத்தில் வந்ததால், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, தடுப்பணை உடைக்கப்பட்டன. சாயக்கழிவுநீர் தேங்கி நிற்காமல், நொய்யலில் சென்று, ஒரத்துப்பாளையம் அணையை பாழாக்கியது. 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்த பிறகு, பாதிப்பு குறைந்தது.
இருப்பினும், உடைக்கப்பட்ட தடுப்பணைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. பசுமை ஆர்வலர்கள் முயற்சியால், அணைக்காடு, காசிபாளையம் தடுப்பணை சீரமைக்கப்பட்டு, மண்ணரை குளம், மாணிக்காபுரம் குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. மொத்தம், 55 ஏக்கர் பரப்பளவு கொண்ட, அணைப்பாளையம் குளம், தனது அடையாளத்தை இழந்து, சீமைக்கருவேல மரக்காடு போல் மாறியுள்ளது.
நல்லாறு, நொய்யலுடன் இணையும் இடத்தில், காளியம்மன் கோவில் அருகே, பெரிய தடுப்பணை உள்ளது. கழிவுநீர் ஆற்றில் சென்று கொண்டிருந்த போது, அணையின் தெற்கு பகுதி, இடிக்கப்பட்டது. கழிவுநீர் தேங்காமல் செல்லும் வகையில், இப்பணி மேற்கொள்ளப்பட்டது. சாயக்கழிவுநீர் பிரச்னை தீர்ந்த பின்னரும், அணையை யாரும் கண்டு கொள்ளவில்லை. திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள குளங்களை, தன்னார்வ அமைப்பினரும், இயற்கை ஆர்வலர்களும் புனரமைத்தனர்.
காளியம்மன் கோவில் அருகில், சிறிய அளவு மட்டுமே, தடுப்பணை உடைந்துள்ளது. அதனை சீரமைத்தால், வாய்க்காலை துார்வாரி, குளத்துக்கு நொய்யல் தண்ணீரை கொண்டு சேர்க்க முடியும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் கூறியதாவது:சாயக்கழிவுநீர் தேங்கக்கூடாது என்பதற்காக, தடுப் பணை உடைக்கப்பட்டதால், குளத்துக்கு தண்ணீர் வரத்து தடைபட்டது. பல ஆண்டுகளாக குளம் வறண்டு கிடக்கிறது. குளத்தில் தண்ணீர் தேக்கினால், அணைப்பாளையம், ராக்கியாபாளையம், ஊத்துக்குளி, பல்லவராயன்பாளையம், கத்தாங்கன்னி, பெரியபாளையம் ஆகிய கிராமங்கள் பயன்பெறும். தடுப்பணையை புனரமைத்து, வாய்க்காலையும் துார்வாரி சுத்தம் செய்ய, மாவட்ட நிர்வாகமும், தன்னார்வ அமைப்புகளும் முன்வர வேண்டும், என்றார்.

மூலக்கதை