அமெரிக்காவில் நடக்க இருந்த இந்தியா-பாக். பேச்சுவார்த்தை ரத்து: காஷ்மீரில் போலீசார் கொல்லப்பட்டதால் அதிரடி

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் நடக்க இருந்த இந்தியாபாக். பேச்சுவார்த்தை ரத்து: காஷ்மீரில் போலீசார் கொல்லப்பட்டதால் அதிரடி

புதுடெல்லி: காஷ்மீரில் 3 போலீசார் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது, காஷ்மீர் தீவிரவாதி பர்கான் வானி தபால் தலை வெளியிடப்பட்டது ஆகியவை காரணமாக, அமெரிக்காவில் நடக்க இருந்த இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படை தளம், காஷ்மீரில் யூரி ராணுவ முகாம் ஆகியவற்றின் மீது கடந்த 2016ல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக, அந்நாட்டுடன் நடத்தி வந்த அனைத்து விதமான அமைதி பேச்சுவார்த்தைகளையும் மத்திய அரசு நிறுத்தியது. உலக நாடுகளும், பாகிஸ்தானும் பலமுறை வலியுறுத்தியும், வேண்டுகோள் விடுத்தும் இன்று வரையில் இந்த முடிவில் இந்தியா பிடிவாதமாக உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இம்ரான்கான் பிரதமரானார்.  இம்ரான்கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் அனுப்பினார். அவரும் அதற்கு நன்றி தெரிவித்து நேற்று முன்தினம் கடிதம் அனுப்பினார். அதில், இருநாடுகளுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க விரும்புவதாக இம்ரான் தெரிவித்து இருந்தார்.  ஐநா. பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது.  இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி ஆகியோர் இம்மாத இறுதியில் செல்கின்றனர். அப்போது, இரு அமைச்சர்களும் சந்தித்து பேசலாம் என இம்ரான் விருப்பம் தெரிவித்தார். இதை மத்திய அரசு நேற்று முன்தினம் ஏற்றுக் கொண்டது. இருநாடுகளுக்கும் இடையே முறிந்து போன பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பாக இது கருதப்பட்டது.  இந்நிலையில், காஷ்மீரில் நேற்று காலை 3 போலீசாரை கடத்திச் சென்று  தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கும், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிந்தது. மேலும், காஷ்மீர் தீவிரவாதி பர்கான் வானியை புகழும் வகையில் 20 தபால் தலைகளை பாகிஸ்தான் வெளியிட்டது. இது, மத்திய அரசுக்கு கடும் ஆத்திரத்தையும், அதிருப்தியையும் அளித்தது. இதையடுத்து, அமைச்சர் சுஷ்மா சுவராஜ்- பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி இடையிலான சந்திப்பை ரத்து செய்வதாக மத்திய அரசு நேற்று அதிரடியாக அறிவித்தது. இது குறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறுகையில், ‘‘காஷ்மீரில் போலீசாரை சுட்டுக் கொன்றவர்கள் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், காஷ்மீர் தீவிரவாதி பர்கான் வாணியின் தபால் தலைகளை பாகிஸ்தான் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இருநாட்டு அமைச்சர்கள் சந்திப்பு பற்றி அறிவிப்பு வெளியான பின் இச்சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவது அர்த்தமற்றது. அதனால் அமெரிக்காவில் நடக்க இருந்த இந்த சந்திப்பு ரத்து செய்யப்படுகிறது’’ என்றார்.‘பயங்கரமான செய்தி’நியூயார்க்கில் இந்தியா-பாகிஸ்தான் அமைச்சர்கள் சந்தித்து கொள்வதாக  அறிவிக்கப்பட்டதை நேற்று காலை அமெரிக்கா வரவேற்றது.  இது குறித்து  அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் ஹீதர் நார்ட் கூறுகையில், ‘‘இந்தியா-பாகிஸ்தான் அமைச்சர்கள் சந்தித்து பேசுவதை ‘பயங்கரமான செய்தியாக’ நினைக்கிறேன். இந்தியா-பாகிஸ்தான் பிரதமர்கள் இடையேயும் சாதகமான தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது. இருநாடுகள் இடையே எதிர்காலத்தில் வலுவான உறவு ஏற்படுவதற்கான சூழ்நிலை அமையும்’’  என்றார். ஆனால், நேற்றிரவு இந்த பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்ததால், அமெரிக்கா ஏமாற்றம் தெரிவித்தது.

மூலக்கதை