இயக்குநர் மீதான புகாருக்கு மறுப்பு: சக அதிகாரியை விமர்சித்து சிபிஐ அறிக்கை: உயரதிகாரிகள் மோதல் உச்சகட்டம்

தினகரன்  தினகரன்
இயக்குநர் மீதான புகாருக்கு மறுப்பு: சக அதிகாரியை விமர்சித்து சிபிஐ அறிக்கை: உயரதிகாரிகள் மோதல் உச்சகட்டம்

புதுடெல்லி: விசாரணைகளில் குறுக்கீடு செய்வதாக சிபிஐ இயக்குநர் மீது சக உயரதிகாரி தெரிவித்துள்ள புகாருக்கு சிபிஐ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களை திரட்டி வரும் அதிகாரிகளை மிரட்டவே இதுபோன்ற புகாரை அந்த அதிகாரி தெரிவித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.  சிபிஐ அமைப்பில் சிறப்பு இயக்குநராக இருப்பவர் அஸ்தானா. இவர், குஜராத் மாநிலத்திலிருந்து ஐபிஎஸ் பதவிக்கு தேர்வானார். இந்த நிலையில் சிபிஐயில் இவரது செயல்பாடுகள் மற்றும் பதவி உயர்வு தொடர்பாக  கடந்த ஆண்டு விஜிலென்ஸ் கமிஷனில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா  தனது கருத்துக்களை பரிந்துரைகளை தெரிவித்து இருந்தார். அதில், அஸ்தானவுக்கு  எதிராகவும், அவரது பதவி உயர்வுக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் அவர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அஸ்தானவுக்கு வர்மாவுக்கும் இடையே பனி்போர் நிலவிவந்தது. இந்நிலையில்,  பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் சம்பந்தப்பட்ட ஐஆர்சிடிசி ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையில் அலோக் வர்மா குறுக்கீடு செய்வதாகவும், லாலு வீட்டில் ரெய்டு நடத்துவதை கடைசி கட்டத்தில் வர்மா தடுத்துவிட்டதாகவும் கூறி. மத்திய அரசிடம் அஸ்தானா புகார் தெரிவித்து இருந்தார். இதனை ஆய்வு செய்த மத்திய அரசு அஸ்தானவின் புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய விஜிலென்ஸ் அமைப்பிற்கு உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ விசாரித்து வரும் முக்கிய வழக்குகளின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி வழக்குகள் சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை தாக்கல் செய்யுமாறு  கடந்த செப்டம்பர் 11 மற்றும் 14ம் தேதி சிபிஐக்கு சிவிசி நோட்டீஸ் அனுப்பியது.  இதனை ஏற்றுக்கொண்டாலும் சிவிசியின் இந்த நடவடிக்கை குறித்து சிபிஐ நிர்வாகம் அதிருப்தி தெரிவித்தது. சிவிசியின் நோட்டீசுக்கு சிபிஐ அளித்துள்ள பதிலில்,  “அஸ்தானா கையாண்ட ஆறு வழக்களில் அவரது தவறான செயல்பாடுகள், நன்னடத்தை குறித்த ஆதாரங்களை சிபிஐ திரட்டி வந்தது. இதை அஸ்தானா நன்கு அறிவார். மேலும், அஸ்தானா விரும்பத்தகாதவர்கள் பெயர் பட்டியலில் உள்ள சில நபர்களுடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தார். இதுகுறித்து அவரது  2018ம் ஆண்டு சிஆர் அறிக்கையில்(ரகசிய அறிக்கை)  தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுவே அவர் சிபிஐ இயக்குநர் மீது புகார் கொடுப்பதற்கு காரணமாகும். எனவே, சிபிஐ அமைப்பின் நன்மதிப்பு கெடாமல் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் இதுபோன்ற தவறான அதிகாரிகளின் புகார்களுக்கு ஊக்கமளிக்க கூடாது” என தெரிவித்துள்ளது.முன்னெப்போதும் இல்லாத நிகழ்வுமுன்னெப்போதும் இல்லாத வகையில் சக அதிகாரியை விமர்சித்து வெளிப்படையாக சிபிஐ நேற்று அறிக்கையில் வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐஆர்சிடிசி ஊழல் வழக்கில் அஸ்தானா கூறுவது முற்றிலும் பொய்யானது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை ஏற்கனவே சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  சிபிஐ இயக்குநர் வர்மாவின் ஒப்புதலின்றி குற்றப்பத்திரிகையை எப்படி தாக்கல் செய்து இருக்க முடியும்?  எனவே, ஆதாரமற்ற அற்பத்தனமாக இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை எந்தவித ஆய்வும் செய்யாமல் பொதுவெளியில்  தெரியபடுத்தியது மிகவும் துரதிஷ்டவசமானது. சிபிஐ இயக்குநரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு சிபிஐ அமைப்பின் அதிகாரிகளை மிரட்டும் தொனியில் தெரிவிக்கப்பட்டுள்ள இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை சிவிசி புறந்தள்ள வேண்டும்.

மூலக்கதை