ஜடேஜா, ரோகித் ராஜ்யம்: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி | செப்டம்பர் 21, 2018

தினமலர்  தினமலர்
ஜடேஜா, ரோகித் ராஜ்யம்: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி | செப்டம்பர் 21, 2018

துபாய்: ஆசிய கோப்பைதொடரில் இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. நேற்று நடந்த‘சூப்பர்–4’ போட்டியில்வங்கதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.‘சுழல்’ ஜாலம் காட்டிய ஜடேஜா, 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் விளாசினார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. நேற்று ‘சூப்பர்–4’ சுற்று போட்டிகள் துவங்கின. துபாயில் நடந்த போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. 9 சர்வதேச போட்டிகளுக்குப் பின் (4 ஒருநாள், 5 டெஸ்ட்), இந்திய அணிக்கு நேற்று அதிர்ஷ்டம் அடித்தது. கேப்டன் ரோகித் சர்மா ‘டாஸ்’ வென்று பீல்டிங் தேர்வு செய்தார். காயத்தால் விலகிய பாண்ட்யாவுக்குப் பதில்  ஜடேஜா சேர்க்கப்பட்டார்.

‘வேகம்’ நம்பிக்கை

வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ், நஜ்முல் ஜோடி துவக்கம் தர, இந்திய அணியின் ‘வேகங்கள்’ புவனேஷ்வர், பும்ரா போட்டுக் தாக்கினர். முதல் 3 ஓவரில் 2 ரன் மட்டும் எடுத்தது வங்கதேசம். இந்நிலையில் லிட்டன் தாசை (7) புவனேஷ்வர் வெளியேற்ற, நஜ்முல்லை (7) பும்ரா திருப்பி அனுப்பினார்.

ஜடேஜா கலக்கல்

நீண்ட இடைவெளிக்குப் பின் ஒருநாள் அரங்கில் களமிறங்கிய ஜடேஜா முதல் 3 பந்தில் 11 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.மனம் தளராத இவர்,தனது ஓவரில் தொடர்ந்து இரு பவுண்டரி அடித்த ‘சீனியர்’ சாகிப் அல் ஹசனை (17)அவுட்டாக்கினார்.தொடர்ந்து அசத்தியஜடேஜா‘சுழலில்’ முகமது மிதுன் (9),முஷ்பிகுர்(21) வீழ்ந்தனர். மகமதுல்லா(25),மொசாதெக் (12) நீடிக்கவில்லை.

பும்ரா அபாரம்

புவனேஷ்வர் ஓவரில் தொடர்ந்து இரு சிக்சர் அடித்த மொர்டசா (26)விரைவில் கிளம்பினார்.பின் வரிசையில் வந்தமெகிதி (42),முஸ்தபிஜுரை (3)பும்ராஅவுட்டாக்கினார்.வங்கதேச அணி 49.1 ஓவரில் 173 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஜடேஜா 4, பும்ரா, புவனேஷ்வர் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

தவான் விளாசல்

எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி வலுவான துவக்கம் கொடுத்தது. மொர்டசா வீசிய முதல் ஓவரில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கினார் ரோகித் சர்மா. தன் பங்கிற்கு மொர்டசா ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசிய தவான், முஸ்தபிஜூர் பந்தில் சிக்சர் அடித்தார்.

ரோகித் அரைசதம்

முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் தவான் (40) அவுட்டானார். இதன் பொறுப்பெடுத்துக் கொண்ட ரோகித், சாகிப் பந்துகளை சிக்சர்களுக்கு விரட்டி, ஒருநாள் அரங்கில் 36வது அரைசதம் எட்டினார். அம்பதி ராயுடு (13) ஏமாற்ற, ரசிகர்களின் பெரும் வரவேற்புக்கு இடையே தோனி வந்தார். ரூபெல், மொர்டசா பந்துகளில் பவுண்டரி தோனி பவுண்டரிகள் அடிக்க இந்திய அணி வெற்றியை வேகமாக நெருங்கியது. இவர் 33 ரன்னுக்கு அவுட்டானார். கடைசியில் ரோகித் ஒரு பவுண்டரி அடிக்க,இந்திய அணி 36.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. ஆசிய கோப்பை தொடரில் ஹாங்காங், பாகிஸ்தான், வங்கதேசத்தை சாய்த்து, இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. ரோகித் (83),தினேஷ் கார்த்திக்(1)அவுட்டாகாமல் இருந்தனர்.

தோனி வியூகம்

ஜடேஜாவின் முதல் ஓவரில் 2, 3 வது பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார் சாகிப் அல் ஹசன். எதிரணி வீரர்கள் குறித்து நன்கு அறிந்து வைத்திருக்கும் தோனி, உடனடியாக கேப்டன் ரோகித்திடம் வந்து பீல்டிங்கை மாற்றி அமைக்க ஆலோசனை தந்தார். இம்முறை 4வது பந்திலும் பவுண்டரி அடிக்க முயன்ற சாகிப், தோனி விரித்த வலையில் வசமாக சிக்கினார் (தவான் ‘கேட்ச்’). இதுக்குத் தான் ‘தல’ வேணும்கிறது. தொடர்ந்து கோஹ்லியைப் போல ரோகித்தும் சற்று விலகிக் கொள்ள, தோனி வழக்கம் போல பீல்டிங் பணியை தோனி கவனித்துக் கொண்டார்.

மறந்து போன மகமதுல்லா

நேற்று ஜடேஜா பந்தில் முகமது மிதுன் ‘எல்.பி.டபிள்யு.,’ ஆனார். இதை எதிர்த்து அப்பீல் செய்தார். ‘ரீப்ளேயில்’ அம்பயர் தீர்ப்பு உறுதியாக, அப்பீல் வாய்ப்பை இழந்தது வங்கதேசம். பின் புவனேஷ்வர் பந்தில் மகமதுல்லாவுக்கு ‘எல்.பி.டபிள்யு.,’ முறையில் அவுட் தரப்பட்டது. உடனடியாக அம்பயரை பார்த்து ‘டி.ஆர்.எஸ்.,’ முறையில் அப்பீல் கேட்டார்.  ஏற்கனவே வாய்ப்பு முடிந்து விட்டதால் சோகத்துடன் வெளியேறினார்.

2

வங்கதேச அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இரண்டாவது இந்திய பவுலர் ஆனார் ஜடேஜா (29 ரன், 4 விக்.,). 2010, தம்புலா போட்டியில் 6 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்திய சேவக் முதலிடத்தில் உள்ளார்.

2

சகால், குல்தீப் இணைந்து 20 ஓவர் பவுலிங் செய்த போதும் நேற்று ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிரான லீட்ஸ் (2018) போட்டியில் இதுபோல மோசமாக சொதப்பினர்.

4

நேற்று நஜ்முல், சாகிப் அல் ஹசன், முஸ்தபிஜுர், மெகிதி என நான்கு பேரை ‘கேட்ச்’ செய்தார் தவான். இதையடுத்து ஒரே ஒருநாள் போட்டியில் 4 ‘கேட்ச்’ செய்த 7வது இந்திய வீரர் ஆனார். இதற்கு முன் கவாஸ்கர் (1985, பாக்.,), அசார் (1997, பாக்.,), சச்சின் (1998, பாக்.,), டிராவிட் (1999, வெ.இண்டீஸ்), முகமது கைப் (2003, இலங்கை), லட்சுமண் (2004, ஜிம்பாப்வே), 4 ‘கேட்ச்’ செய்தனர்.

5

நேற்று 15.4 ஓவரில் வங்கதேச அணி 60 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. கடந்த 12 ஒருநாள் போட்டிகளில் முதல் 16 ஓவர்களுக்குள் குறைந்தது 3 அல்லது அதற்கும் மேல் என விக்கெட்டுகளை இழப்பது 5வது முறையாக நடந்தது.

441

இந்திய வீரர் ஜடேஜா கடந்த 2017, ஜூலை 6ம் தேதி கிங்ஸ்டன் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடைசியாக களமிறங்கினார். பின் ஒருநாள் அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. 441 நாட்கள் கழித்து நேற்று மீண்டும் வாய்ப்பு பெற்ற இவர் 4 விக்கெட் சாய்த்து கலக்கினார்.

‘வால்’ ஆடியது

வங்கதேச அணி 101 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. பின் அடுத்த 3 விக்கெட்டுகள் இணைந்து 72 ரன்கள் எடுக்க, ஸ்கோர் 173 ஆனது.

 

மூலக்கதை