ஆப்கனை அடக்கியது பாக்., | செப்டம்பர் 22, 2018

தினமலர்  தினமலர்
ஆப்கனை அடக்கியது பாக்., | செப்டம்பர் 22, 2018

அபுதாபி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை ‘சூப்பர்–4’ சுற்றுப்போட்டியில் மாலிக் விளாச பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. அபுதாபியில் நடந்த ‘சூப்பர்–4’ சுற்றுப்போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் அஸ்கர் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு முகமது நவாஸ் தொல்லை தந்தார். இவரது ‘சுழலில்’ முகமது ஷாஜத் (20), இஷானுல்லா (10) சிக்கினர். ரஹ்மத் ஷாவும் 36 ரன்களில் அவுட்டானார். பின், இணைந்த ஹஸ்மதுல்லா, அஸ்கர் ஜோடி அபாரமாக விளையாடியது. இருவரும் அரை சதம் விளாச, ‘ஸ்கோர்’ சிறப்பாக உயர்ந்தது. 

நழுவிய சதம்

நான்காவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தபோது, அஸ்கர் (67) அவுட்டானார். அறிமுக வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிதி பந்துவீச்சில் முகமது நபி (7) சிக்கினார். உஸ்மான் வீசிய கடைசி ஓவரில் ஹஸ்மதுல்லா மிரட்டினார். இவர் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார். முடிவில், ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்தது. சதம் நழுவவிட்ட ஹஸ்மதுல்லா (97), குல்பதீன் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

மாலிக் அரை சதம் 

பின், களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பகர் ஜமான் டக் அவுட்டானார். இமாம் (80), பாபர் ஆசம் (66) அரை சதம் அடித்து நல்ல அடித்தளம் அமைத்தனர். ஹாரிஸ் சோகைல் (13), கேப்டன் சர்பராஸ் (8) ஏமாற்றினர். ரஷித் ‘சுழலில்’ ஆசிப் அலி (7), நவாஸ் (10) திரும்பினர். ஆலம் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்டது. மாலிக் தொடர்ந்து ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து அரை சதம் எட்டினார். பாகிஸ்தான் அணி 49.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மாலிக் (51), ஹசன் அலி (6) அவுட்டாகாமல் இருந்தனர். இத்தொடரில் இலங்கை, வங்கதேசத்தை வென்ற ஆப்கானிஸ்தான் நேற்று முதல் தோல்வியை பெற்றது. 

97

அபாரமாக விளையாடிய ஹஸ்மதுல்லா 97 ரன் விளாசினார். இதன் மூலம், ஒரு நாள் அரங்கில் ஒரே இன்னிங்சி்ல் சதம் அடிக்காமல், அதிக ரன் சேர்த்த ஆப்கன் வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன், ஷென்வாரி 96 ரன்கள் (எதிர்– ஸ்காட்லாந்து, டுனிடின், 2015) எடுத்ததே அதிகம்.

நபி அபாரம்

நேற்று 7 ரன்கள் எடுத்த முகமது நபி, ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் சேர்த்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்தார். இதுவரை 104 போட்டியில் 2333 ரன் குவித்துள்ளார்.

 

 

மூலக்கதை