சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் சிரமம்: கலெக்டர் அலுவலகத்தில் 'லிப்ட்' இல்லை

தினமலர்  தினமலர்

சிவகங்கை;மத்திய அரசின் 'சிப்டா' திட்டப்படி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் 'லிப்ட்' வைக்காததால், மாற்றுத் திறனாளிகள் சிரமப்படுகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 1995 ன் படி, அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்றுவர ஏதுவாக சாய்தளம், கைப்பிடி, 'லிப்ட்,' கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். தமிழகத்தில் சில கலெக்டர் அலுவலகங்களில் மட்டுமே 'லிப்ட்' வசதி உள்ளது. அதேபோல் பெரும்பாலான அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளில் சாய்தள வசதி இல்லை.உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர மத்திய அரசு 'சிப்டா' திட்டத்தை செயல்படுத்தியது. இதற்காக தமிழகத்தில் மாவட்ட வாரிய அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டன. தொடர்ந்து கலெக்டர் அலுவலகங்களில் 'லிப்ட்கள்,' அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளில் சாய்தளம், கைப்பிடி, கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் போன்றவை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு கடந்த ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.ஆனால் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இதுவரை 'லிப்ட்' வசதி ஏற்படுத்தவில்லை. அதேபோல் மற்ற அரசு அலுவலகங்களிலும் சாய்தள வசதி அமைக்கவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர்.

மூலக்கதை