பரிதவிப்பில் பயணிகள்! பஸ் ஸ்டாண்டுகளில் காணோம் அடிப்படை வசதிகள்:அதிகாரிகள் அக்கறையின்மையால் போச்சு சுகாதாரம்

தினமலர்  தினமலர்

ராஜபாளையம்;விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் பரிதவிக்கின்றனர். அதிகாரிகளின் நடவடிக்கை இல்லாததால் சுகாதாரத்துடன் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது. மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைநகர்களில் பஸ் ஸ்டாண்ட்கள் செயல்பட்டு வருகின்றன. அடிப்படை வசதிகள் என்பது தேவையான அளவு இல்லை.
குடி நீர் இருப்பதில்லை. பயணிகள் அமரும் இருக்கைகள் சேதமடைந்து உள்ளது. இருக்கும் சில இருக்கைகளில் மது போதை ஆசாமிகள் ஆக்கிரமித்து துாக்கத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். பஸ்கள் வர முடியாத நிலையில் டூவீலர்களும், ஆட்டோக்களும் ஆக்கிரமிப்பு செய்கின்றன. ராஜபாளையம் பஸ் ஸ்டாண்டுகளில் கழிப்பறை சுகாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இங்குள்ள இலவச கட்டண கழிப்பறைகள் பராமரிக்காததால் பயணியர் தவிக்கின்றனர். மெயின் ரோடு வரை துர்நாற்றம் மூக்கை துளைக்கிறது. குடிநீர் தொட்டி வைத்து ஆர் ஓ., பிளாண்ட் மாட்டியுள்ளனர்.
குடிநீர் காலியானாலோ, பழுதடைந்தாலோ உடனடி ஏற்பாடு இருப்பதில்லை. மழை நேரங்களில் மாடுகள் படுத்து அசுத்தப்படுத்துகின்றன. இத்தனை பிரச்னைகள் இருந்தும் கண்டு கொள்ளாத அதிகாரிகளால் பயணிகள்தான் பெரிதும் தவிக்கின்றனர்.

பாதுகாப்பை அதிகரியுங்க
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டு பெண்கள் சுகாதார வளாக கழிவுகள் வாறுகாலில் விடப்படுவதால் மிகுந்த பாதிப்பு தருகிறது. பயணியர் பாதுகாப்பற்கான அவுட் போஸ்ட் போலீசார் எந்நேரமும் அலைபேசியில் பிஸியாக உள்ளனர். தொடர் ரோந்து செல்லாததால் இரவில் சமூக சீர்கேடு இடமாக மாறி வருகிறது. சுகாதாரத்தை மேம்படுத்தி, பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.--முத்தீஸ்வரன், சமூக ஆர்வலர், ராஜபாளையம்

மூலக்கதை