பயணியர் காது, மூக்கில் ரத்தக் கசிவு: 'ஜெட் ஏர்வேஸ்' விமானத்தில், 'பகீர்'

தினமலர்  தினமலர்
பயணியர் காது, மூக்கில் ரத்தக் கசிவு: ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், பகீர்

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு புறப்பட்ட, 'ஜெட் ஏர்வேஸ்' விமானத்தில், பயணியரின் காது, மூக்கில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம், மும்பை விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டு, அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சுவாசிப்பதில் சிரமம்நேற்று காலை, மும்பை விமான நிலையத்தில் இருந்து, 166 பயணியர் மற்றும் ஐந்து ஊழியர்களுடன் ஜெய்ப்பூருக்கு, ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது.விமானம், சிறிது உயரத்துக்கு சென்றதும், விமானத்தின் உட்பகுதியில் உள்ள காற்றின் அழுத்தத்தை சீராக்கும், 'பிளீட் ஸ்விட்ச்' எனப்படும் பொத்தானை, ஊழியர்கள் அழுத்தினால் தான், பயணியர் சீராக சுவாசிக்க முடியும்.

முதலுதவி சிகிச்சை

ஆனால், ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டதும், ஊழியர்கள், இந்த பொத்தானை அழுத்த மறந்ததால், பயணியருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்ட பயணி யருக்கு, காது, மூக்கில் ரத்தக்கசிவும், சிலருக்கு தலைவலியும் ஏற்பட்டது.இதையடுத்து, அந்த விமானம் மீண்டும், மும்பை விமான நிலையத் தில் தரையிறக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பயணியருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் சிலர், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்த விசார ணைக்கு, விமான போக்கு வரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, விமான போக்குவரத்து துறை அமைச்சர், சுரேஷ் பிரபு கூறுகையில், ''அனைத்து விமானங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

மூலக்கதை