முதல்வர், காவல் துறை அதிகாரி குறித்து அவதூறு பேச்சு நடிகர் கருணாசை கைது செய்ய திட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல்வர், காவல் துறை அதிகாரி குறித்து அவதூறு பேச்சு நடிகர் கருணாசை கைது செய்ய திட்டம்

சென்னை: முதல்வர், போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசிய நடிகர் கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய அனுமதி கேட்டு சபாநாயகருக்கு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இந்து மக்கள் முன்னணி நிறுவனர் நாராயணன் புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த 17ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அந்த அமைப்பின் தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான கருணாஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் தி. நகர் துணை கமிஷனர் அரவிந்தனை “நான் அன்றைக்கே அவரது டவுசரை கழட்டியிருப்பேன்” வேண்டுமென்றால் காக்கிச் சட்டையை கழற்றி வைத்து விட்டு வாருங்கள் பார்க்கலாம் என்ற அவர் காவல் அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசி இருக்கிறார். அத்துடன் வன்முறையை தூண்டும் விதமாகவும் மேலும் தனது கட்சியினரிடம் கொலை செய்ய வேண்டுமானாலும் என்னிடம் சொல்லிவிட்டு செய்யுங்கள்.

நான் உங்களை காப்பாத்துகிறேன்.

நீ எங்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்களைஅடித்தால் நான் உங்கள் கை, கால்களை உடைப்பேன் என்ற காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியிருக்கிறார். சமீபத்தில் நடந்த தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.

அப்போது முதல்வர் அங்கு வந்ததாகவும், அந்த இடத்தில் கருணாஸ் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் போலீஸ் அதிகாரிகள் நீங்கள் நிற்க வேண்டாம் என்று கருணாஸிடம் சொன்னதாகவும், ஏன் என்று கேட்டதற்கு நீங்கள் முதலமைச்சரை அடித்து விடுவீர்கள், முதல்வர் உங்களை கண்டு பயப்படுகிறார்.

என்று சில அதிகாரிகள் சொன்னதாகவும், வேண்டுமானால் அந்த அதிகாரிகளிடம் போன் போட்டு கேட்டுப் பார், முதலமைச்சரை நான் அடிப்பேன் என்று பயப்படுகிறார் என்றும் ஆகையால் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் எனக்கு ஒன்றுமில்லை என்று அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியிக்கிறார். நாட்டின் முதலமைச்சர் மற்றும் காவல் துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய நடிகர் கருணாஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் படி போலீஸ் கமிஷனர் ஏ. ேக. விஸ்வநாதன் உரிய நடவடிக்கை எடுக்க நுங்கம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி நுங்கம்பாக்கம் போலீசார் ஆர்பாட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை பெற்று ஆய்வு செய்தனர்.

அப்போது நடிகர் கருணாஸ் முதல்வர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியது உறுதி செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து ேநற்று நுங்கம்பாக்கம் போலீசார் நடிகரும், திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் மீது ஐபிசி 153, 153(A)(1)(b)(c),307, 506(i),120(b), சிட்டி போலீஸ் ஆக்ட் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், போராட்டத்துக்கு அனுமதி கேட்ட, கருணாஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செல்வநாயகம், வக்கீல் தாமோதரன் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செல்வநாயகத்தை கைது செய்ய போலீசார் அவரது வீட்டுக்குச் சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். ஆனால் கருணாஸ் எம்எல்ஏ என்பதால் அவரை கைது செய்ய அனுமதி கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் இருந்து சபாநாயகருக்கு நேற்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சபாநாயகர் அனுமதி கிடைத்ததும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

.

மூலக்கதை