கூடங்குளம் 2வது அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கூடங்குளம் 2வது அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்

வள்ளியூர்: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது அணு உலையில் கடந்த 2014 டிச. 31ம் தேதியில் இருந்தும், 2வது அணுஉலையில் 2017 மார்ச் 31ம் தேதியில் இருந்தும் வணிக ரீதியான மின்உற்பத்தி நடந்து வருகிறது. முதல் மற்றும் 2வது அணு உலையில் இருந்து தமிழகத்திற்கு தலா 562 மெகாவாட்டும், மீதமுள்ள மின்சாரம் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, புதுவை ஆகிய மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இந்த 2 அணு உலையிலும் உற்பத்தியாகும் மின்சாரமானது நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஆக. 1ம் தேதி முதலாவது அணு உலை எரிபொருள் மாற்றுவதற்காகவும், பராமரிப்பு பணிகளுக்காகவும் நிறுத்தி வைக்கப்பட்டது. 2வது அணு உலையில் ஆக. 2ம் தேதி வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது.

2 அணு உலைகளும் தொடர்ந்து நிறுத்தப்பட்டதால் தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய 1124 மெகாவாட் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் 2வது அணுஉலையில் பழுது சீரமைக்கப்பட்டு கடந்த 13ம் தேதி மாலையில் இருந்து மின் உற்பத்தி தொடங்கியது. படிப்படியாக மின்உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டு நேற்று காலை 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

இதனிடையே 2வது அணுஉலையில் மீண்டும் ஏற்பட்ட பழுது காரணமாக நேற்று மாலை 5. 45 மணிக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கூடங்குளம் 2வது அணுஉலை வால்வில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னும் ஒரு வார காலத்திற்குள் சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என கூடங்குளம் அணுமின் நிலையை வட்டாரங்கள் தெரிவித்தன.

.

மூலக்கதை