ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் மூழ்கிய நிலையில் ஆற்றை கடக்கும் பொதுமக்கள்

தினகரன்  தினகரன்
ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் மூழ்கிய நிலையில் ஆற்றை கடக்கும் பொதுமக்கள்

ஓசூர்: ஓசூர் அருகே அமைந்துள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாத்தகோட்டா தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனை பொருட்படுத்தாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உயிரைப் பணயம் வைத்து தரைப்பாலம் வழியே ஆற்றை கடந்து செல்கின்றனர். கர்நாடக மாநிலம் நந்திமலைப் பகுதியில் பெய்த கனமழையால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் 960 கன அடி தண்ணீர் முழுவதுமாக தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பாத்தகோட்டா பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. அப்பகுதி மக்கள் தரைப்பாலத்தை கடக்காமல் ஊரை அடைய வேண்டுமானால், பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் தங்களது உயிரை பணயம் வைத்து தரைப்பாலத்தை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இந்த ஆபத்தான பயணத்தை தடுத்து நிறுத்துவதோடு, தரைப்பாலத்தை கடக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் வைத்துள்ளனர்.

மூலக்கதை