ஆப்கானின் பந்து வீச்சில் சின்னாபின்னமானது பங்களாதேஷ்...!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஆப்கானின் பந்து வீச்சில் சின்னாபின்னமானது பங்களாதேஷ்...!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தானின் புயலில் சிக்கி 119 ஒட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 136 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.

 
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 
 
ஆப்கான் அணி சார்பாக ஹஷ்மத்துல்லா ஷஹதி 58 ஓட்டத்தையும், ரஷித் கான் 57 ஓட்டத்தையும், குல்பாடின் நைய்பி 42 ஓட்டத்தையும் பெற்றுக் கொண்டனர்.
 
256 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி சார்பில் லிட்டான் தாஸும், ஹுசைன் ஷான்டோவும் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நிலையில் ஷான்டோ 7 ஓட்டத்துடனும் லிட்டான் தாஸ் 6 ஓட்டத்துடனும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி 4.5 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்குள் முதல் இரண்டு விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
 
இவர்களின் வெளியேற்றத்தை தொடர்ந்து ஷகிப் அல் ஹசனும் மெமனுள் ஹாக்கும் ஜோடி சேர்ந்து ஆடி வர அணியின் ஓட்ட எண்ணிக்கை 39 ஆக அதிகரித்தபோது மெமனுள் ஹாக் 9 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க இவரையடுத்து களம்புகுந்த மெஹமட் மிதுன் 2 ஓட்டத்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.
 
இதனால் பங்களாதேஷ் அணி 14.1 ஓவரில் 43 ஓட்டங்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. இதற்கடுத்தபடியாக களமிறங்கிய பங்களாதேஷ் அணி வீரர்களும் ஆப்கானிஸ்தான் சுழலில்  சிக்கி அடுத்தடுத்து வெளியேறினர்.
 
அதன்படி ஷகிப் அல் ஹசன் 32 ஓட்டத்துடனும், மாமதுல்ல 27 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி 90 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்தது.
 
மேலும் 32.5 ஆவது ஓவரில் அணி 100 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள ஹுசேன் 11 ஓட்டத்துடனும் மெய்டி ஹசான் 4 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வந்தனர். இருந்தபோதும் 33.1 ஆவது ஓவரில் மெய்டி ஹசான் 4 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து களமிறங்கிய அணித் தலைவர் மொஷ்ரபி மோர்டாசாவும் எதுவித ஓட்டமுமின்றி ஆட்டமிழந்தார்.
 
இறுதியாக பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானின் பந்துகளை சமாளிக்க முடியாது திக்குமுக்காடி 42.1 ஒவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 136 ஒட்டத்தால் வெற்றி பெற்றது. 
 
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், குல்பாடின் நைய்பி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் அத்தாப் ஆலம், ரஹ்மத் ஷா மற்றும் மெஹமட் நைய்பி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

மூலக்கதை