காலை, மாலையில் ஸ்பெஷல் பஸ்; நெரிசல் தவிர்க்க, 'வெரிகுட்' திட்டம்

தினமலர்  தினமலர்
காலை, மாலையில் ஸ்பெஷல் பஸ்; நெரிசல் தவிர்க்க, வெரிகுட் திட்டம்

கோவை : கோவை மாநகரில் பள்ளி, கல்லுாரி நேரங்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது; இதனை தவிர்க்க 'பீக் ஹவர்ஸ்'ல், சிறப்பு பஸ்களை இயக்க, போக்குவரத்து துறையிடம் போலீசார் பரிந்துரை செய்ய உள்ளனர்.

கோவை மாநகரில் அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, சத்தி ரோடு, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட முக்கிய ரோடுகளில், அதிக பள்ளி மற்றும் கல்லுாரிகள் அமைந்துள்ளன. அனைத்து ரோடுகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரிகள் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், தினமும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனை தவிர்க்க பள்ளி, கல்லுாரி நேரங்களில் சிறப்பு பஸ்களை இயக்குவது குறித்து, போக்குவரத்து துறையிடம் போலீசார் பரிந்துரைக்க உள்ளனர்.

போலீஸ் கமிஷனர் பெரியய்யா கூறியதாவது: அவிநாசி ரோடு உட்பட முக்கிய ரோடுகளில் கல்லுாரி, பள்ளி அருகே காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம். பெரும்பாலான மாணவ, மாணவியர் பஸ்களை தான் பயன்படுத்துகின்றனர். பஸ் ஸ்டாண்டுகளில் பஸ்சுக்காக, கும்பலாக காத்து நிற்பதால் நெரிசல் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க பள்ளி, கல்லுாரிகள் துவங்கும், 'பீக் ஹவர்ஸ்'ல், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டால், விரைவில் மாணவர்கள் வீடு சென்று விடலாம். இதன்பின், அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் செல்லும்போது, நெரிசல் குறையும். சிறப்பு பஸ்கள் இயக்க, போக்குவரத்து துறையிடம் பரிந்துரைக்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை