நான் தல ரசிகை; ஆனால், விஜயுடன் நடிக்க ஆசை: அதிதி மேனன்

தினமலர்  தினமலர்
நான் தல ரசிகை; ஆனால், விஜயுடன் நடிக்க ஆசை: அதிதி மேனன்

மலையாளத்தில் இருந்து வந்தவர், அதிதி மேனன். தமிழில், சந்தனத்தேவன், களவாணி மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவருடன் பேசியதிலிருந்து:

களவாணி மாப்பிள்ளையில், தினேஷ் உடன் நடித்த அனுபவம்...

தினேஷ் ரொம்ப அமைதியானவர். கேமரா முன் வந்து நின்று விட்டால், கதைக்கு ஏற்றபடி மாறி விடுவார். படப்பிடிப்பில் அதிகமாக பேச மாட்டார். காட்சிகள் குறித்து விவாதிக்கும் போது, அவரது ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அடிக்கிற காட்சியில் கூட வலிக்காதது போல் இருப்பார்.

மலையாளம், தமிழ் இரண்டு திரையுலகத்துக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டு திரையுலகமுமே சிறப்பாக உள்ளன. என் தாய்மொழி மலையாளமாக இருந்தாலும், தமிழில் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. தமிழில் நடிப்பதற்கு எனக்கு சவுகரியமாக உள்ளது. இங்கு திறமையான இயக்குனர்கள் உள்ளனர். மலையாளத்தில், கதையை நல்லபடியாக தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். ஒரு நல்ல படம் கொடுக்கவில்லை என்றால் அவ்வளவு தான். ஆனால் தமிழில் அப்படியில்லை; தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றன.

தமிழ் ரசிகர்கள் குறித்து?

என் போஸ்டரை பார்த்து தான், எனக்கு நிறைய ரசிகர்கள் உருவாகினர். என்னை தமிழ் பெண்ணாகவே பலர் பார்த்தனர். அவர்களின் அன்பு, ரொம்ப வித்தியாசமானது. நடிகையாக பார்க்காமல், சொந்த உறவை போலவே பழகுகின்றனர். நல்ல படத்தை கொடுத்தால், பாராட்டுகின்றனர். சரி இல்லை என்றால், அதற்கு ஏற்ற மாதிரி, எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும், முகத்திற்கு நேராக சொல்லி விடுகின்றனர்.

அடுத்து யாருடன் நடிக்க ஆசை?

நான், தல ரசிகை. ஆனால், விஜய் உடன் நடிக்க ஆசை. தமிழ் திரையுலகை பொறுத்தவரை அனைவருக்கும் உள்ள ஆசை இது.

நீங்கள் விரும்பும் இயக்குனர்?

எனக்கு பிடித்த இயக்குனர் பாலா. நான் நடித்த படங்களின் இயக்குனரை பொறுத்தவரை அமீரை பிடிக்கும்.

சந்தனத்தேவன் படம் குறித்து?

முழுக் கதையையும் நான் கேட்கவில்லை. அமீர் இயக்குகிறார் என்பதாலேயே சந்தனத்தேவன் படத்தில் நடிக்க சம்மதித்தேன். சந்தனத்தேவன் படம், மதுரையின் பழைய வரலாறு குறித்து பேசும். இந்தப்படம் என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய வரம்.

தமிழ் சரளமாக பேசுகிறீர்களே?

நான் சரளமாக தமிழில் பேச காரணம், இயக்குனர் அமீர் தான். சந்தனத்தேவன் படத்திற்காக தமிழ் கற்றுக் கொள்வது முக்கியமாக இருந்தது.

எதிர்காலம் குறித்து?

நல்ல படங்கள் தர வேண்டும். நிறைய பயணங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ் சினிமாவில் பணியாற்றுவது மிகவும் சிறப்பாக உள்ளது.

மூலக்கதை