ஓய்வு இல்லாது தவிப்பு: விடுமுறை இன்றி தொடர் பணி:மன உளைச்சலில் தொழிலாளர்கள்

தினமலர்  தினமலர்
ஓய்வு இல்லாது தவிப்பு: விடுமுறை இன்றி தொடர் பணி:மன உளைச்சலில் தொழிலாளர்கள்

சிவகாசி:மாவட்டத்தில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காமல் தொடர்ச்சியாக வேலை வாங்குவதால் ஓய்வு இல்லாமல் சிரமப்படுகின்றனர்.எந்த ஒரு தொழிற்சாலையும் தொடர்ச்சியாக 10 நாட்கள் தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது, தேவை கருதி வேலைக்கு அழைத்தால் அவர்களுக்கு மாற்று விடுமுறை வழங்க வேண்டும்.
வார விடுமுறை நாள் என ஏழு நாட்களுக்குள் ஏதாவது ஒரு தினத்தை தேர்ந்தெடுத்து அரசிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். தேசிய பண்டிகை நாட்கள், உள்ளூர் திருவிழா விடுமுறை நாட்கள் என 9 விடுமுறைக்கு அரசு அனுமதியளித்துள்ளது.
இந்த நாட்களில் இயங்கினால் அன்றைய நாளில் இரு மடங்கு சம்பளம், மாற்று விடுமுறை வழங்க வேண்டும். இத்தகைய விதிமுறைகளை பெரும்பாலான தொழிற்சாலைகள், வர்த்தக நிறுனங்கள் கடைபிடிப்பதில்லை.சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதி பட்டாசு தொழிற்சாலைகள், அச்சகங்கள், கடைகள், நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை விடுமுறை இன்றி தொடர்ச்சியாக இயங்குகிறது.
தொடர்ச்சியாக இயங்குவதால், தொழிலாளர்கள் ஓய்வின்றி உழைக்கின்றனர். மன உளைச்சல் மற்றும் உடல் பலகீனத்தால் அவதிப்படுகின்றனர். கண்காணிக்க வேண்டிய பறக்கும் படையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. அவ்வப்போது கண்துடைப்பாகவே பணி நடைபெறுகிறது.
உடல் நலிவாகும்
விடுமுறை இல்லாமல் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மன ரீதியாகப் பாதிக்கின்றனர். இயந்திரமாகவே மாறி வேலை பார்க்கும் இவர்கள் நாளடைவில் உடல் நலிவடைகின்றனர். உடல் பலம் இருந்தால்தான் உழைக்க முடியும். அரசு விதிமுறைகளை கடைபிடித்து தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.-- முனீஸ்பாண்டி, வழக்கறிஞர், சிவகாசி.

மூலக்கதை