தனித்தமிழ் அறிஞர் புலவர் கி.த.பச்சையப்பனார் மறைவுக்கு அஞ்சலி

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தனித்தமிழ் அறிஞர் புலவர் கி.த.பச்சையப்பனார் மறைவுக்கு அஞ்சலி

தாய்மொழிக் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த தமிழறிஞர் புலவர்  திரு. கி.த.பச்சையப்பன் அவர்கள் இன்று காலை சென்னையில் காலமானார். இவருக்கு வயது 82.

ஊடகங்களில் தமிழ் மணப்பதற்கு அடிப்படைக் காரணமாக விளங்குபவர்களுள் புலவர் கி.த.பச்சையப்பன் அவர்கள் தலையாயவர். மொழிநடை ஆசிரியர் என்னும் பொறுப்பளிக்கப்பட்டு மொழிச்செப்பம் அமையத் தமிழ் ஓசை நாளேட்டில் பணிபுரிபவர்.

புலவர் அவர்கள் காலையில் புதுச்சேரியில் இருப்பார். பகலில் சென்னையில் போராட்டத்தில் இருப்பார். மறுநாள் கன்னியாகுமரியில் உண்ணாநோன்பில் தலைமை ஏற்பார். மறுநாள் தஞ்சையில் தமிழ்வழிக் கல்விக்குக் குரல் கொடுத்துப் பேசுவார். அந்த அளவு பம்பரமாகச் செய்பட்டவர்.

இளமையில் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து பணிபுரிந்தவர். மயிலம் தமிழ்க்கல்லூரியில் தமிழ் கற்ற பெரும்புலமையாளர். தமிழாசிரியராகப் பல பள்ளிகளில் பணிபுரிந்தவர். புதுச்சேரி இந்தியாவுடன் இணையப் போராடி அடிபட்டவர். பிறப்பிலேயே வீரமும் தமிழ்ப்பற்றும், போராட்டக் குணமும் அமையப்பெற்ற நம் புலவர் அவர்கள் தமிழகத் தமிழாசிரியர் கழகம், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளில் தலைமை தாங்கிப் பணிபுரிபவர்.

மயிலம் கல்லூரிப் படிப்பிற்குப் (1955-59) பிறகு அரக்கோணம் ,செங்கழுநீர்ப்பட்டு, சென்னை உள்ளிட்ட ஊர்களில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து தமிழ், பொதுவுடைமை, பகுத்தறிவு, திராவிட இயக்க உணர்வை மாணவர்களுக்கு ஊட்டி வளர்த்தவர்.  தாய்மொழிக் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்.

இவர் கடைசி மூச்சு வரை தமிழ் மொழிக்காக பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கணினி, செல்பேசிகளில் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த ஆங்கிலத்திற்கு பதிலாக தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் பச்சையப்பன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில நாடகங்களில் நடித்துள்ளார். இவர் தமிழாசிரியர் சங்கத்திற்கும் தலைவராக இருந்துள்ளார். இவரது மறைவிற்கு தமிழாசிரியர்கள், தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் வலைத்தமிழ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது..



மூலக்கதை