வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது:  புயல் உருவாகும் அபாயம்  துறைமுகங்களில் ‘அலர்ட்’

தமிழ் முரசு  தமிழ் முரசு
வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது:  புயல் உருவாகும் அபாயம்  துறைமுகங்களில் ‘அலர்ட்’

சென்னை: வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதனால் புயல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.   வங்கக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் உருவானது.

நேற்றும் அதே பகுதியில் இந்த காற்றழுத்தம் நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பலத்த மழை கொட்டியது.

அதேபோல் தமிழகத்தின் அநேக மாவட்டங்களிலும் கடந்த 4 தினங்களாக பரவலாக மழை பெய்கிறது.
சென்னையில் கடந்த 3 தினங்களாக விட்டு, விட்டு லேசான மழை பெய்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பல இடங்களில் விடிய, விடிய கனமழை பெய்தது.

தொடர்ந்து நேற்றும் நாள் முழுவதும் சென்னையில் விட்டு, விட்டு லேசான சாரல் மழை பெய்தது.

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இன்று அதிகாலை 5. 30 மணி நிலவரப்படி அந்த காற்றழுத்தம் மணிக்கு 23 கி. மீட்டர் வேகத்தில் நகர்ந்து மேற்கு மத்திய வங்க கடல் முதல் கிழக்கு மத்திய வங்க கடல் வரை பரவி காணப்பட்டது. பின்னர் அந்த காற்றழுத்தம் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்தில் இருந்து 360 கி. மீட்டர் தொலைவிலும், தென்கிழக்கு கோபால்பூரில் (ஒடிசா) இருந்து 330 கி. மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.



அடுத்த 12 மணி நேரத்தில் இந்த காற்றழுத்தம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் வழியாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்காளம், கடலோர ஆந்திரா உள்ளிட்ட வட மாநிலங்களில் அடுத்த 2 தினங்களுக்கு மிக,மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதேபோல், தமிழகத்தின் கடலோர பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது. வங்க கடலில் இன்று பலத்த காற்று வீசி வருகிறது.

மணிக்கு 65 முதல் 75 கி. மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வானிலையை பொறுத்த வரை காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பதே புயல் உருவாவதற்கான ஒரு அறிகுறி ஆகும்.

இந்த சூழலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதால் வங்க கடலில் புயல் ஏற்படும் அபாயம் உள்ளது.  

இதுகுறித்து, வானிலை அதிகாரிகளிடம் கேட்டபோது, “காற்றழுத்தமானது வடமேற்கு திசையில் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் வழியாக கரையை கடந்து மத்திய பிரதேசம் நோக்கி செல்லும் வாய்ப்பு உள்ளது.

இதனால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதேசமயம் அடுத்த 2 தினங்களுக்கு வங்க கடலில் அசாதாரணமான சூழ்நிலை உருவாகும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் சென்னை, கடலூர், நாகை, புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மாலை அல்லது இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்றனர்.

.

மூலக்கதை