ஆசிய கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆசிய கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

துபாய்: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றன.

இதில் ஏ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ரஸ் அகமது பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். பின்னர் பாபர் அசாம் -சோயிப் மாலிக் ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்து 3வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர்.

பகுதி நேரப் பந்துவீச்சாளராக வந்த கேதர் ஜாதவ் இந்த ஜோடியைப் பிரித்தார்.

 பின்னர் அடுத்தடுத்த விக்கெட்டுகள் தொடர்ந்து சரியத் தொடங்கின. இறுதியில் பாகிஸ்தான் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா சார்பில் கேதர் ஜாதவ், புவனேஷ்வர் குமார் தலா 3 விக்கெட்டுகளை அள்ளினர். 43. 1 ஓவர்களில் அந்த அணி 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பாபர் அசாம் அதிகபட்சமாக 47 ரன்கள் சேர்த்தார்.

இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார், கேதர் ஜாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சீரான வேகத்தில் ரன்களைச் சேர்த்தனர்.

முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி 86 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 52 ரன்களும், ஷிகர் தவான் 46 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹாங்காங்குக்கு எதிராக இந்தியா விளையாடிய அதே மைதானத்தில்தான் இந்தப் போட்டியும் நடந்தது.

ஹாங்காங்குக்கு எதிராக சொதப்பலாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர்கள் இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி பாகிஸ்தானை குறைவான ரன்களில் கட்டுப்படுத்தினர். இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வங்கதேச அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

.

மூலக்கதை